×

திருப்பதியில் இருந்து குடியாத்தம் வரை சினிமா பாணியில் நடந்த சம்பவம்: 2 பேர் படுகாயத்துடன் அட்மிட், 3 பேர் தப்பி ஓட்டம்

குடியாத்தம், மார்ச் 23: திருப்பதியில் இருந்து குடியாத்தம் வரை சினிமா பாணியில், அரை டன் செம்மரக்கட்டைகளை கடத்தி வந்தபோது விபத்துக்குள்ளான காரில் இருந்து 3 பேர் தப்பியோடிவிட்டனர். 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வனத்துறை பின்தொடர்ந்ததால் கட்டைகளை சாலையில் வீசி வனத்துறையினரின் காரை கவிழ்க்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே ஆந்திர வனத்துறையினர் நேற்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தமிழக பதிவெண் கொண்ட கார் அதிவேகமாக வந்தது. அதனை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த ஆந்திர வனத்துறையினர், அந்த காரை பின் தொடர்ந்தனர். வனத்துறையினர் விரட்டி வருவதை அறிந்து, காரில் வந்தவர்கள் மேலும் அதிவேகமாக ஓட்டி வந்து, ஆந்திர எல்லையில் இருந்து குடியாத்தம் சாலையில் தமிழக எல்லைக்குள் நுழைந்தனர்.

இதைக்கண்ட ஆந்திர வனத்துறையினர், குடியாத்தம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், குடியாத்தம் வனத்துறையினர் நேற்று காலை சுமார் 8 மணியளவில் பரதராமி சோதனைச்சாவடியில் தயார் நிலையில் இருந்தனர். அப்போது, அதிவேகமாக வந்த காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அங்கும் கார் நிற்காமல் குடியாத்தம் நகரம் நோக்கி விரைந்தது.

இதனையடுத்து ஆந்திரா மற்றும் குடியாத்தம் வனத்துறையினர் சேர்ந்து காரை பின்தொடர்ந்தனர். குடியாத்தம் அடுத்த பாக்கம் பகுதியில் அதிவேகமாக வந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சிறிய பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த காரில் இருந்த 3 பேர், தப்பியோடிவிட்டனர்.

இதையடுத்து பின்தொடர்ந்து வந்த வனத்துறையினர், காரை திறந்து சோதனை செய்தபோது அதில் 2 பேர் படுகாயத்துடன் காரில் இருந்து வெளியே வரமுடியாமல் தவிப்பதும், காரில் சுமார் அரைடன் எடையுள்ள செம்மரக்கட்டைகள் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காரில் படுகாயத்துடன் இருந்த 2 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் காருடன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், சிகிச்சை பெற்று வருபவர்களிடம், அவர்கள் யார்? எங்கிருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்தனர்? எங்கு கடத்தி செல்கிறார்கள்? தப்பி ஓடியவர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பியோடிய 3 பேரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில் செம்மரக்கட்டைகளை கடத்திய காரை, ஆந்திர வனத்துறையினர் துரத்தி வந்ததால், அவர்களது காரை கவிழ்ப்பதற்காக, கடத்தல் கும்பல் 2 செம்மரக்கட்டைகளை சாலையில் வீசியுள்ளனர். சினிமா பாணியில் நடந்த இந்த கடத்தல் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags : Forest Department ,
× RELATED எலக்ட்ரீசியன் குடும்பத்துக்கு ரூ.18...