வேலூர், மார்ச் 23: வேலூர் மாவட்டத்தில் யூரியா இருந்தும், விவசாயிகளுக்கு விற்பனை செய்யாவிட்டால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் இன்றைய நிலவரப்படி யூரியா 2,445 டன், டிஏபி 1,544 டன், பொட்டாஷ் 384 டன், காம்ப்ளக்ஸ் கலப்பு உரங்கள் 5,907 டன், சூப்பர் பாஸ்பேட் 398 டன், இயற்கை உரம் 9 டன் என மொத்தம் 10,688 டன் இருப்பு உள்ளது.
விவசாயிகள் தங்களின் சிட்டா மற்றும் ஆதார் எண் கொடுத்து அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களிலும் தங்களின் பயிர் சாகுபடி பரப்பிற்கு ஏற்ற அளவு யூரியா மற்றும் பிற உரங்களை வாங்கி பயன்படுத்தலாம். விற்பனையாளர்கள், விவசாயிகள் உரங்களை வாங்கும்போது, அவர்களின் பயிர் சாகுபடி பரப்பின் உண்மை தன்மையை அறிந்து சாகுபடி பரப்பிற்கு ஏற்றவாறு விவசாயிகள் கேட்கும் உரங்களை விற்பனை செய்ய வேண்டும்.
மேலும் விற்பனை செய்யப்படும் உரங்களுக்கு பட்டியலிட்டு ரசீது வழங்க வேண்டும். ரசீது வழங்காத கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடைக்கு வரும் விவசாயிகளுக்கு யூரியா இருப்பு வைத்து கொண்டு, யூரியா இல்லை என சொல்லக்கூடாது. அதேபோன்று யூரியா உரத்தை விவசாயிகள் தேவைக்கு அதிகமாக பயன்படுத்த கூடாது. மண் வளம் பாதுகாக்கும் பொருட்டு இயற்கை உரங்களை அதிக அளவில் பயன்படுத்தி, ரசாயன உரங்களை குறைவாக பயன்படுத்த வேண்டும். யூரியா உரத்திற்கு பதிலாக, இலை வழியாக தெளிக்க கூடிய நேநோ யூரியாவை பயன்படுத்தலாம்.
பேரூட்ட சத்துக்கள் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் கொண்ட கலப்பு உரங்களை அடி உரமாக பயன்படுத்தலாம். விலை குறைவாக உள்ளதால் யூரியா உரத்தை மட்டுமே விவசாயிகள் பயன்படுத்தக்கூடாது. யூரியா உரத்தில் உள்ள நைட்ரஜன் சத்து, காம்ப்ளக்ஸ் உரங்களிலும் உள்ளது. மேலும் யூரியா உரம் இருப்பு வைத்துக்கொண்டு, விவசாயிகள் கேட்கும் போது யூரியா இல்லை என கூறினால் அல்லது ரசீது வழங்காமல் உரங்கள் விற்பனை செய்தால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும்.
