- தீர்த்தீஸ்வரர்
- பங்குனி பிரம்மோத்ஸவம்
- திருவள்ளூர்
- திருவள்ளூர் திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில்
- பங்குனி மாத பிரம்மோத்ஸவ விழா
திருவள்ளூர், மார்ச் 21: திருவள்ளூர் திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோயிலில், பங்குனி மாத பிரம்மோற்சவ விழாவின் 7ம் நாளில் சிறப்பு அலங்காரத்தில் தீர்த்தீஸ்வரர், ரத உற்சவத்தில் எழுந்தருளி காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூரில் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், பங்குனி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 24ம் தேதி வரை 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவ விழாவையொட்டி காலை, மாலை 2 வேளைகளிலும் சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் செய்யப்பட்டு சிம்ம வாகனம், ஹம்ச வாகனம், சூரிய பிரபை வாகனம், சந்திர பிரபை வாகனம், பூத வாகனம், அதிகார நந்தி வாகனம், நாக வாகனம், மயில் வாகனம், யானை வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7ம் நாளான நேற்று காலை ரத உற்சவம் நடைபெற்றது. இதில் வண்ண, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், திரிபுரசுந்தரி அம்மாளுடன் தீர்த்தீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைத்தொடர்ந்து, சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதனையடுத்து, இன்று (21ம் தேதி) இரவு தீர்த்தீஸ்வரருக்கும், திரிபுரசுந்தரிக்கும் திருக்கல்யாணமும், நாளை மறுநாள் (23ம் தேதி) காலை தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா ரவி குருக்கள் செய்து வருகின்றனர்.
