×

புதுச்சேரியில் மாற்றுக்கட்சியினருக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு புஸ்ஸி ஆனந்தை தவெகவினர் முற்றுகை:கோடிகளில் பணம் இல்லாததால் துரத்தப்பட்டோம் என ஆதங்கம்; டிவிகே ஒழிக என கோஷம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 9ம் தேதி நடைபெறவுள்ளது. வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் முடிந்தது. நேற்று முன்தினம் இரவு 30 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தவெக வெளியிட்டது. இதில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, காங்கிரஸ் என பிரதான கட்சியில் சீட் மறுக்கப்பட்டவர்களுக்கு தவெகவில் சீட் வழங்கி குதூகலப்படுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த ஐந்தாண்டுகளாக என்.ஆர் காங்கிரஸ் ஆதரவு சுயேச்சையாக செயல்பட்டு வந்த முத்தியால்பேட்டை தொகுதி பிரகாஷ்குமார், இந்த முறை என்.ஆர்.காங்கிரசில் போட்டியிட திட்டமிட்டார். ஆனால் அவருக்கு முதல்வர் ரங்கசாமி கல்தா கொடுத்துவிட்டு, அதிமுகவை சேர்ந்த வையாபுரி மணிகண்டனுக்கு வாய்ப்பு வழங்கினார். இதனால் வேறு வழியின்றி அவர் தவெக சார்பில் களமிறங்கவுள்ளார்.

புதுச்சேரியில் பாஜவை வளர்த்ததில் பெரும் பங்கு வகித்த முன்னாள் மாநில தலைவர் சாமிநாதன், அக்கட்சியில் இருந்து ஓரங்கப்பட்டதால், அதிருப்தியில் இருந்து வந்தார். அவர் தவெகவில் இணைந்து புதுச்சேரியில் தேர்தல் ஒருங்கிணைப்பாளர் பதவி பெற்றதோடு, இந்த முறை லாஸ்பேட்டை தொகுதியில் களமிறங்குகிறார். காரைக்கால் பகுதியை சேர்ந்த அசானா தேமுதிகவில் இருந்து, அதிமுகவுக்கு தாவி 2016ம் ஆண்டு எம்எல்ஏவானார். அதிமுகவில் சீட் கிடைக்காது என்பதால், இந்த முறை காரைக்கால் தெற்கு தொகுதி தவெக வேட்பாளராகியிருக்கிறார்.

பாகூர் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வந்த தனவேலு, கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டு, கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டிருந்தார். அவர் இந்த முறை பாகூர் தொகுதியின் தவெகவின் திடீர் வேட்பாளராகியுள்ளார். பாஜவில் சேர்ந்த முன்னாள் ஐஜியை அக்கட்சி கண்டு கொள்ளதாதால், அங்கிருந்து வெளியேறி ராஜ்பவன் தொகுதியிலும், பாஜவில் ஊசுடு தொகுதியில் சீட்டு மறுக்கப்பட்ட, மாஜி அமைச்சர் சாய். ஜெ. சரவணன்குமார், திருபுவனை தொகுதி வேட்பாளராகியுள்ளனர்.

மணவெளி தொகுதி பாஜ பிரமுகர், பாஜ சபாநாயகர் செல்வத்தின் ஆதரவாளருமான ராமு மணவெளி தொகுதியில் போட்டியிடவுள்ளார். ரங்கசாமியின் தீவிர ஆதரவாளரான அழகு என்கிற அழகுவேல் என்.ஆர் காங்கிரசில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவரும், தவெகவில் இணைந்துள்ளார். அதேபோல் அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி நெட்டப்பாக்கம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடுகிறார். இப்படி பல கட்சிகளில் தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களின் புகலிடமாக தவெக மாறியுள்ளது. அதே நேரத்தில் தவெகவில் ஆரம்பத்தில் இருந்தே பணியாற்றிய பலருக்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வாய்ப்பு தரவில்லை. தனக்கு தெரிந்தவர்களுக்கும், மாற்று கட்சியை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கியதாக எல்லோரும் குமுறி வருகின்றனர்.

வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட சில நிமிடங்களில், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தவெகவினர் ரெயின்போ நகர் பகுதியில் ஒரு வீட்டில் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த புஸ்ஸி ஆனந்தை முற்றுகையிட்டனர். மணவெளி தொகுதியில் சீட்டு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த முருகன் தலைமையில் நிர்வாகிகள் போராட்டத்தில் குதித்தனர். ரசிகர் மன்றமாக இருந்ததில் இருந்து பணியாற்றி வருபவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டுமென முழக்கமிட்டனர். பல ஆண்டுகளாக விஜய்யின் பின்னால் நின்றோம், எங்களிடம் கோடிக்கணக்கில் பணம் இல்லை, வேட்பாளராக்க ஏன் பணம் வசூல் செய்ய வேண்டும். நம்பி வந்தோம் கழுத்தறுத்துவிட்டனர். இனிமேல் சீட்டு கொடுத்தால் கூட வேண்டாம், டிவிகே ஒழிக, புஸ்ஸி ஆனந்து ஒழிக என கோஷமிட்டனர். அவர்கள் கட்சி கொடியை, பேட்ஜை திரும்ப ஒப்படைப்பதாகக்கூறி ரோட்டில் வீசி விட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

* வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் தவெக திடீர் கூட்டணி: 2 தொகுதி ஒதுக்கீடு
புதுச்சேரியில் உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்எல்ஏ நேரு, நேயம் மக்கள் கழகம் என்ற கட்சியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்தார். தற்போது அவர், தவெகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவுள்ளார். அவருக்கு இரண்டு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் உருளையன்பேட்டை தொகுதியில் நேரு எம்எல்ஏவும், தட்டாஞ்சாவடி தொகுதியில் அவரது மைத்துனர் விநாயகமும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தேர்தல் ஆணையத்துக்கு தனி சின்னம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும்போது, அவரது சின்னம் தெரியவரும். கூட்டணிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால், உருளையன்பேட்டை, தட்டாஞ்சாவடி தொகுதிகளில் தவெக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட மரியா பிரான்சிஸ் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட சீட் இல்லை.

Tags : Puducherry ,Pussi Anand Thaveka ,TVK ,Thaveka ,NR Congress ,AIADMK ,Congress… ,
× RELATED புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு...