×

இதயம் காப்போம் திட்டம்; சொன்னாரு..! செஞ்சாரு..!!

 

சொன்னாரு: தமிழகத்தில் உள்ள துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதய பாதிப்புகளைச் சரிசெய்ய 14 மாத்திரைகள் கொண்ட ‘இதயம் காப்போம் திட்டம்’ 2023-24ம் ஆண்டிற்கான சுகாதாரத்துறை சட்டமன்ற அறிவிப்பில் அறிவிக்கப்பட்டது. செஞ்சாரு: உலக சுகாதார அமைப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 கோடியே 70 லட்சம் பேர் இதய நோயினால் இறக்கின்றனர். இது உலகளாவிய இறப்புகளில் சுமார் 31 சதவீதம் ஆகும். மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் கரோனரி இதய நோய் ஆகியவை இதய கோளாறுகளால் ஏற்படும் இறப்புகளுக்கு மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் மாரடைப்பு காரணமாக உயிரிழக்கின்றனர். தமிழ்நாட்டிலும் இதய நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

அவற்றில் ஒன்று ‘இதயம் காப்போம்’ திட்டம். இது ஆரம்ப நிலை சுகாதார மையங்களில் உடனடி சிகிச்சை அளித்து உயிரிழப்புகளைத் தடுக்கும் முன்னோடி திட்டமாகும். இத்திட்டம் கிராமப்புற மக்களுக்கு கோல்டன் அவர் (முதல் ஒரு மணி நேரம்) சிகிச்சையை உறுதி செய்து, இதய நோயாளிகளின் உயிரைக் காக்கிறது. இத்திட்டத்தை 2023ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி துணை சுகாதார நிலையத்தில் தொடங்கி வைத்தார். ரூ.3.37 கோடி செலவில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) மேற்பார்வையில் செயல்படுத்தப்படுகிறது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் (2,286) மற்றும் துணை சுகாதார நிலையங்கள் (8,713) உள்ளிட்ட 9,421 மையங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மாரடைப்பு அறிகுறிகள் (நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் போன்றவை) உள்ள நோயாளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்தால், உடனடியாக இ சி ஜி எடுக்கப்படுகிறது. மாவட்ட அளவிலான இதய நோய் நிபுணருடன் தொலைபேசி ஆலோசனை நடைபெறுகிறது. பின்னர், 14 வகை இதய பாதுகாப்பு மாத்திரைகள் (ஆஸ்பிரின்(2), க்ளோபிடோக்ரல்(4), அட்ரோவாஸ்டின்(8)) இலவசமாக வழங்கப்படுகின்றன. சராசரியாக 13 நிமிடங்களில் மருந்து அளிக்கப்பட்டு, 108 அவசர ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்கு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கபடுகிறார்கள். இந்த உடனடி சிகிச்சை ரத்த உறைவைத் தடுத்து, இதய தசையைப் பாதுகாக்கிறது. கிராமப்புறங்களில் உயர் மையத்திற்கு செல்லும் பயண நேரத்தில் ஏற்படும் உயிரிழப்பை இது தடுக்கிறது.

தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநரகம் மேற்கொண்ட ஆய்வின்படி, திட்டம் தொடங்கியதிலிருந்து 2024 ஆகஸ்ட் வரை 6,493 நோயாளிகளிடம் பகுப்பாய்வு செய்யப்பட்டது. இவர்களில் 97.7 சதவீதம் பேர் (6,346 பேர்) உயிர் பிழைத்து நிலையான நிலையில் இருந்தனர். வெறும் 2.2 சதவீதம் மட்டுமே உயிரிழந்தனர். குறிப்பாக இத்திட்டம் தொடக்கத்தில் (2024 ஜனவரி) 5,000 க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர். 2024 மே வரை 6,090 பேர், செப்டம்பர் வரை 11,000-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். 2025 அக்டோபர் வரை 40,000-க்கும் மேற்பட்டோர் உயிர் பிழைத்துள்ளனர். இத்திட்டம் தமிழ்நாட்டின் சுகாதாரத் துறையின் முன்னோடி முயற்சியாகத் திகழ்கிறது. கிராமப்புற ஏழை மக்களுக்கு இலவசம், உடனடி சிகிச்சை என்பது இதன் சிறப்பு. எதிர்காலத்தில் இதன் விரிவாக்கமும், ஆய்வுகளும் இதய நோய் மரண விகிதத்தை மேலும் குறைக்கும். ‘இதயம் காப்போம்’ திட்டம் மக்கள் நலனை முதன்மைப்படுத்திய அரசின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.

 

Tags : Sencharu ,Tamil Nadu ,Health Department ,World Health Organization ,
× RELATED புதுச்சேரி தொகுதி பங்கீடு கையெழுத்து காங்கிரஸ்-16, திமுக -14