தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், மேற்கு மண்டலத்தின் முக்கிய மையமான கோவையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு நடந்து வருகிறது. கடந்த 2021 தேர்தலில் கோவையில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் இருந்த திமுகவின் நிலை தற்போது நேர்மாறாக மாறியுள்ளது. இம்முறை, மேற்கு மண்டலத்தில் பெரும்பாலான தொகுதிகளில் ‘உதயசூரியன்’ சின்னமே நேரடியாக களம் இறங்க வேண்டும் என்பது தொண்டர்களின் ஒற்றை இலக்காக உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்கினால், அது எதிரணிக்கு சாதகமாகிவிடும் என்பதால், அதற்கான முன்னெடுப்புகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், தமிழக உளவுத்துறை சமர்ப்பித்துள்ள ரகசிய அறிக்கை, திமுக கூட்டணிக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது. உளவுத்துறை அறிக்கையில், ‘கடந்த நான்கு ஆண்டுகளில் கோவை மாநகரின் வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்ட சாலை விரிவாக்க பணிகள், தடையற்ற குடிநீர் திட்டங்கள் மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெட்ரோ ரயில் அறிவிப்புகள் ஆகியவை பொதுமக்களிடையே திமுகவின் செல்வாக்கை 40 சதவீதத்திற்கும் மேல் உயர்த்தியுள்ளது. மக்கள் தற்போது கட்சியின் சின்னத்தை பார்த்து வாக்களிக்கும் மனநிலையில் இருப்பதாகவும், குறிப்பாக, திமுக நேரடியாக போட்டியிடும் இடங்களில் வெற்றி உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தரவுகளின் அடிப்படையில், கோவையில் 2 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு, மீதமுள்ள 8 இடங்களில் திமுக நேரடியாக களம் இறங்கும் என தெரிகிறது. இதேபோல், அதிமுக கூட்டணியில், 2 அல்லது 3 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 7 முதல் 8 தொகுதிகளில் அதிமுக நேரடியாக போட்டியிடும் நிலை உள்ளது. அதனால், கோவையில் பெரும்பாலான தொகுதிகளில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் நேரடி போட்டி நிலவும் என்பது உறுதியாகிவிட்டது.
