தேர்தல் களம் சூடுபிடித்து உள்ள நிலையில், தமிழக பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதற்காக, கோவையில் 4 தொகுதிகளை தேர்வுசெய்து ஆலோசனை செய்து வருகிறாராம். 2021 தேர்தலில் அண்ணாமலை, தனது சொந்த ஊரான அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். அதில் அவர் வெற்றி பெறவில்லை. அதன்பிறகு கோவை மாவட்டத்தில் கவனம் செலுத்தினார். அவரது மனைவி அகிலாவின் சொந்த ஊர் கோவைதான். ஆரம்பத்தில், கோவைக்கு வரும்போது அவரது மாமனார் வீட்டில் தங்கி வந்தார். பின்னர் நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பிறகு காளப்பட்டி ரோட்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார்.
நயினார் நாகேந்திரன் பாஜ மாநில தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு அதிருப்தியில் இருந்த அண்ணாமலை, கட்சி பணிகளில் இருந்து விலகியிருந்தார். தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்தும் விலகியிருந்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார் என்று சொல்லப்பட்டது. ஆனால், தனது முடிவை மாற்றிக்கொண்ட அண்ணாமலை முதலில், சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகின. இதேபோல், கவுண்டம்பாளையம், பல்லடம், பழனி தொகுதிகளிலும் அவர் போட்டியிடுவதாக தகவல் வெளியானது.
தொடர் தோல்வி பயத்தில் உள்ள அண்ணாமலை சிங்காநல்லூர், கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு ஆகிய 4 தொகுதிகளை குறிவைத்து உள்ளதாகவும், இதில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதற்காக அந்த 4 தொகுதிகளை சேர்ந்த பாஜ நிர்வாகிகளுடன் அண்ணாமலை கடந்த சில நாட்களாக ரகசிய ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்த 4 தொகுதிகளில் பாஜ பெற்ற வாக்குகள், தற்போதைய கள நிலவரம், அதிமுக, பாஜவின் அமைப்பு, எதிரணியின் பலம், பலவீனம் என பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து, ஒரு தொகுதியை அண்ணாமலை டிக் செய்ய உள்ளாராம்.
