பங்குச்சந்தைகள் கடும் சரிவு ஒரே நாளில் ரூ.14 லட்சம் கோடி இழப்பு: முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் நேற்றும் கடும் சரிவைச் சந்தித்தன. மும்பை பங்குச்சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 1,800 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.14 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா போர் தொடங்கியதில் இருந்தே இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. பெரும்பாலான நாட்கள் சரிவிலேயே முடிந்து விட்டன. கடந்த 11ம் தேதியில் இருந்து 13ம் தேதி வரை ரூ.17 லட்சம் கோடியை முதலீட்டாளர்கள் இழந்தனர். அடுத்து 3 நாட்கள் சந்தை ஏற்றத்துடன் காணப்பட்டது.

பின்னர் கடந்த 19ம் தேதியில் இருந்து நேற்று வரை சந்தையில் கடும் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நாட்களில் மொத்தம் ரூ.24 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 20ம் தேதி மும்பை பங்குச்சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 74,533 புள்ளிகளில் நிறைவடைந்தது. வாரத்தின் முதல் நாளான நேற்று 73,732 புள்ளிகள் என சரிவுடனேயே தொடங்கியது. அதிகபட்சமாக 72,558 புள்ளிகள் வரை சரிந்தது. வர்த்தகம் முடிவில் 1,837 புள்ளிகள் சரிந்து 72,696 புள்ளிகளில் நிலை பெற்றது. அதாவது 2.46 சதவீதம் சரிந்தது.

இதுபோல், தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிப்டி 602 புள்ளிகள் சரிந்து 22,513 புள்ளிகளில் நிலை பெற்றது. மருந்து, வங்கிசார்ந்த பங்குகள் கடும் சரிவை அடைந்தன. அதானி போர்ட் பங்குகள் 4 சதவீதத்துக்கு மேல் சரிந்தது. இதனால், முதலீட்டாளர்கள் ஒரே நாளில் ரூ.14 லட்சம் கோடியை இழந்தனர். இந்த மாதம் துவக்கத்தில் மார்ச் 2ம் தேதி மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளின் மொத்த மதிப்பு ரூ.4,56,90,693 கோடியாக இருந்தது. நேற்று இது ரூ.4,15,21,630 கோடியானது. அதாவது, நடப்பு மாதத்தில் நேற்று வரை இந்திய பங்குச்சந்தையில் மொத்தம் ரூ.41,69,063 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால் ஈரான் மின் நிலையங்களை அழித்து விடுவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இதற்கு பதிலடி கொடுத்த ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை முற்றிலுமாக மூடி விடுவோம் என எச்சரித்தது பதற்றத்தை அதிகமாக்கி விட்டது. இதன் காரணமாக சர்வதேச பங்குச்சந்தைகளும், இந்தியப் பங்குச்சந்தைகளும் ஆட்டம் கண்டு விட்டன.

மேலும், இந்த போர் காரணமாக, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் 110 டாலருக்கு மேல் தொடர்ந்து நீடிக்கிறது. இந்தியாவில் காஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு காணப்படும் நிலையில் கச்சா எண்ணெய் இருப்பு குறைவு போன்ற காரணங்கள் தட்டுப்பாடு அச்சத்தை அதிகமாக்கி விட்டன. மேலும், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச்சந்தையில் இருந்து ரூ.1,03,967 கோடி வெளியேற்றி விட்டதாக என்எஸ்டிஎல் தரவுகள் தெரிவிக்கின்றன. இவையே பங்குச்சந்தை சரிவுக்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.

* ரூ.94ஐ தாண்டியது ரூபாய் மதிப்பு
இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே ரூபாய் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அதிலும், ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 3 சதவீதம் சரிந்துள்ளது. நேற்று இந்திய ரூபாய் மதிப்பு 50 காசுகள் சரிந்து ரூ.94.03 ஆனது. இதன்மூலம் வரலாறு காணாத அளவுக்கு மதிப்பை இழந்திருக்கிறது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் முதலீடுகளை திரும்பப் பெற்றது, விலை வாசி உயர்வால் பண வீக்கம் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட தாண்டும் அபாயம், வட்டி உயர்வு அபாயம் போன்றவை இதற்கு காரணங்களாக கூறப்படுகின்றன. ஒன்றிய பாஜ ஆட்சிக்கு வரும்போது, அதாவது பிரதமராக நரேந்திரமோடி முதல் முறையாக பொறுப்பேற்கும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.61 ஆக இருந்தது. தற்போது வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

Related Stories: