ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கோடை மழையால் தேயிலை செடிகள் பசுமையாக காட்சியளிப்பது மட்டுமின்றி மகசூலும் அதிகரித்துள்ளது.நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாதம் துவங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம்.
கடந்த ஆண்டு வழக்கம் போல் தென்மேற்கு பருவமழை குறித்த காலத்தில் துவங்கி இடைவிடாமல் பல மாதங்கள் பெய்தது. பின் துவங்கிய வடகிழக்கு பருவமழையும் இரு மாதங்கள் பெய்தது. இதனால், மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிந்தன. இந்த தண்ணீர் கடந்த மாதம் வரை தாக்குப்பிடித்தது.
ஆனால், கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மழை பெய்யாத நிலையில், அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் அளவு குறைந்துகொண்டே சென்றது. போதிய மழை இல்லாத நிலையில், தேயிலை மகசூல் குறைந்தது. மலை காய்கறி விவசாயமும் பாதிக்கப்பட்டது.
இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். கடந்த இரு மாதங்களாக சமவெளிப் பகுதிகளில் மின் தேவை அதிகரிக்கவே, அனைத்து நீர் மின் நிலையங்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், முக்கிய அணைகளில் தண்ணீர் குறைந்து கொண்டே செல்கிறது. நீரோடைகள், குளங்கள், கிணறுகளிலும் தண்ணீர் அளவு நாளுக்கு நாள் குறைகிறது.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளிலும் லேசானது முதல் கனமழை அவ்வப்போது பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக பனியில் கருகிய தேயிலை செடிகள் துளிர்க்க ஆரம்பித்துள்ளன.
இதனால் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. அதேபோல், மலைப்பாங்கான பகுதிகளிலும், விவசாயிகள் விவசாயம் மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த மழையால் வனங்களிலும் பசுமை திரும்ப வாய்ப்புள்ளது.
இதேபோன்று மேலும் ஓரிரு நாட்கள் நீலகிரியில் கன மழை பெய்தால், மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் ஆதாரங்களிலும் தண்ணீர் அளவு உயர வாய்ப்புள்ளது. அதேபோல், அனைத்து பகுதிகளிலும் பசுமை திரும்ப வாய்ப்புள்ளது. எங்கு பார்த்தாலும் பசுமையாக காட்சியளிக்க வாய்ப்புள்ளது.
மேலும், பகல் நேரங்களில் மேக மூட்டம் காரணாக ரம்மியமான காலநிலை நிலவுகிறது. இதனால், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் குளு குளு காலநிலையை அனுபவித்து செல்கின்றனர்.
