திருப்புவனம், மார்ச் 21: திருப்புவனம் அருகே அச்சங்குளத்தில் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தின் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டது. இங்கு நெல் சன்னரகம் 1 கிலோ ரூ.25.45, புதுரகம் 1 கி ரூ.25 வீதம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இங்கு கொள்முதல் செய்யப்பட்ட 41 கி கொண்ட 8 ஆயிரத்து 500 மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன.
கடந்த 10 நாட்களாக லாரிகள் மூட்டைகளை ஏற்ற வரவில்லை. அதனால் மூட்டைகள் தேங்கி உள்ளன. வெயிலில் மூட்டைகள் எடை குறைவு ஏற்படும் என்றும் கொள்முதல் நிலைய ஊழியர்கள் தெரிவித்தனர். இவை தவிர 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கொண்டுவந்துள்ள நெல் மூட்டைகள் 3 ஆயிரம் மூட்டைகள் எடைபோடாமல் தேங்கி கிடைக்கின்றன.
இதனால் விவசாயிகளுக்கும், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. திருப்புவனம் பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான மூட்டைகள் லாரிகள் வரவில்லை என்பதால் தேங்கிக் கிடக்கினறன. உடனடியாக மாவட்ட நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் நெல் மூட்டைகளை ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
