அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணையாக விளங்கும் ராமலிங்க அடிகளார் தமிழ் வளர்ச்சியிலும் சைவ சமய வளர்ச்சியிலும் ஈடுபட்டுத் தம் வாழ்நாளைச் செலவழித்துப் புதிய சமரச சன்மார்க்கத்தை தோற்றுவித்தவர் ஆவார். கிபி. 1823 ஆம் ஆண்டு சிதம்பரம் அருகே உள்ள மருதூரில் பிறந்தவர். இவர் பாடல்கள் அருட்பா என்று வழங்கப்பட்டன. இவரது திருவருட்பாப்பாடல்கள் ஆறுதிருமுறைகளாகத் தொகுக்கப்பட்டு 399 பதிகங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. 5818 பாடல்கள் கொண்டது திருவருட்பாவாகும்.
உள்ளத்தை உருக்கும் இவர் பாடல் களால் மக்கள் இவரை வள்ளலார் என்று அழைத்தார்கள். வாடியபயிரைக்கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார், வடலூரில் சத்திய தர்மசாலை, சத்திய ஞான சபை ஆகிய அமைப்புகளை நிறுவினார். வள்ளலார் பாடல்கள் பாடுவதற்குக் காரணம் கூறுகையில்;
“ஏன் உரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்!
யான் அடையும் சுகத்தினை நீர்தான் அடைதல் குறித்தே’’
– என்று கூறுகிறார்.
தான் பாடல் எழுதுவதற்குக் காரணம் நான் அடையும் இன்பத்தினை இவ்வுலகினர் அனைவரும் அடைய வேண்டும் என்பதற்காகவே ஆகும் என்கிறார். இதிலிருந்து உலக உயிர்கள் எல்லாம் சுகம் பெற வேண்டும் என்ற அவரது உள்ளத்தை உணரமுடிகிறது.
மனமே கோயில்
நல்ல உள்ளம் கடவுள் நடமாடும் கோயில் என்று கூறுவார் வள்ளலார். ஒவ்வொருவரும் தூய்மையான உள்ளத்தைக் கொண்டிருப்பார்களானால், அந்த உள்ளத்தில் இறைவன் குடிகொள்வான். அப்பொழுது நாம் ஞானம் பெறலாம் என்பது வள்ளலாரின் வாக்காகும். அந்த வகையில் அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணையாக விளங்கும் ராமலிங்க அடிகளார், புதிய சன்மார்க்க சங்கத்தைத் தோற்றுவித்து வாழ்ந்த புரட்சிச் சித்தராகக் காணப்படுகிறார்.
புரட்சித் துறவி
ஜீவகாருண்ய ஒழுக்கம், மரணம் இல்லாப் பெருவாழ்வு, பசிப்பிணிப் போக்குதல் பொதுவுடைமைச் சிந்தனை போன்ற புரட்சிகரமான கருத்துக்களை மக்களுக்கு வழங்கியப் புரட்சியாளராக வள்ளலார் திகழ்ந்துள்ளார்.
தெய்வமணிமாலை
ராமலிங்க வள்ளலார் பாடிய திருவருட்பா நூலில் இடம் பெற்றத் தெய்வமணிமாலை சென்னை கந்தக் கோட்டத்துப் பெருமான் முருகனை வழிபட்டுப் பாடியதாகும். தனது ஒன்பதாவது வயதில் பள்ளியில் படிக்கும் பொழுதே தெய்வமணி மாலையில் 31 பாடல்கள் எழுதியுள்ளார். அவரதம் ஆன்மிகப் பயணத்திற்கு அரிச்சுவடி இட்ட கடவுள் முருகக் கடவுள் என்பதைத் தனது ஒன்பதாவது வயதில் தெய்வமணிமாலை இயற்றியதன் மூலம் அறியலாம். இந்த நூலில் முருகப் பெருமானின் சிறப்புகள் பலவற்றையும் எழுதியுள்ளார்.
பிரணவ மந்திரத்தின் திருவுருவம் முருகப் பெருமான் என்பதை உணர்த்துகிறார் சிவபெருமான் நெற்றிப் பொறியிலிருந்து முருகப் பெருமான் தோன்றிய வரலாற்றையும் பதிவு செய்கிறார். வள்ளலாரின் இறைவாழ்வு துவங்கியது முருகப் பெருமானால்தான் என்பதைத் தெய்வ மணிமாலை நமக்கு உணர்த்துகிறது. முருகன், கண்ணாடியில் தனக்குக் காட்சியளித்ததால் முருக பக்தரானார்.
இந்த நூலில் கந்தர் சரணப்பத்து சண்முகக்கும்மி சண்முகர் வருகை திருத்தணிகைப் பதிகம் என்ற அமைப்பில் பாடல்கள் அமைந்துள்ளன. பன்முக நோக்கில் இப்பாடல்கள் அமைந்துள்ளன. தெய்வமணி மாலையானது முதல் திருமுறை முதல் பகுதியில் அமைந்துள்ளது. இந்த நூலிலுள்ள பாடல்கள் இறைவன் திருவருள் மற்றும் ஆன்ம ஞானம் என்ற இரண்டினையும் விளக்குகின்றன. பன்னீர் சீர்கழிநடுநடியால் இப்பாடல்கள் அனைத்தும் அமைந்துள்ளன.
தெய்வமணிமாலை ஓர் ஆற்றுப்படையே!
பொதுவாக ஆற்றுப்படை நூல்கள் என்பது வழிப்படுத்துவது என்ற பொருளில் அமையும். ஓர் அரசனிடம் பரிசில் பெற்ற புலவன் மற்றொரு புலவனுக்கு வழிகாட்டுதல் என்ற ஒரு முறையும், இறைவனிடம் அருள் பெற்றப்பக்தன் மற்றொரு பக்தனை இறைவனின் அருள் பெற ஆற்றுப்படுத்துதல் என்ற ஒரு முறையும் ஆகிய முறைகளில் ஆற்றுப்படை அமைகின்றன. அதேபோல் தெய்வமணிமாலை நூலும் தெய்வத்தின் அருள், செல்வம், ஞானம், இன்பம் ஆகியவற்றை இறைவனிடம் எப்படி பெறுவது என்பதை ஆற்றுப்படுத்துகிறது. எனவே, இது நம்மை வழிப்படுத்துவதால் ஆற்றுப்படை நூலுள் அடங்கும் என்பது உண்மை.
வள்ளலார் கூறும் ஞானம் பெறும் வழிமுறைகள்
மனிதர்கள் ஞானத்தை உணரும் வகையினைத் தெய்வமணி மாலையில் மிக நுட்பமாகக் கூறுகிறார் வள்ளலார்.
“திருவோங்கு புண்ணியச் செயலோங்கி யன்பருள்
திறலோங்கு செல்வ மோங்கச்
செறிவோங்க வறிவோங்கி நிறைவான வின்பந்
திகழ்ந் தோங்க அருள் கொடுத்து
மருவோங்கு செங்கமல மலரோங்கு வணமோங்க
வளர்கருணை மயமோங்கி யோர்
வரமோங்கு…’’ (தெய்வமணி மாலை
பாடல்-01)
என்று எல்லா வளங்களும் ஓங்கி வளர்ந்து இறைவனின் கருணையும் ஓங்க ஒரு வரம் அருள வேண்டும் என்று வேண்டி நின்ற வள்ளலார்.
“தெள்ளமுத வயமோங்கி யானந்த
வடிவாகி யோங்கி ஞான
உருவோங்கு முணர்வினிறை யொளியோங்கி யோங்குமயில்
ஊர்ந்தோங்கி யெவ்வுயிர்க்கும்
உறவோங்கு நின்பதமென் னுளமோங்கி வளமோங்க
உய்கின்ற நாளெந்த நாள்
தருவோங்கு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே’’ (தெய்வமணிமாலை பாடல்-01).
– என்று பாடுகிறார்.
இங்கு கந்தகோட்டத்திலுள்ள முருகனிடம் என் கண்களின் வழியாக என்னுள் ஒளியாக ஊடுருவி ஆன்ம ஞானத்தை நான் உணர வேண்டும் என்று வேண்டுகிறார்.
“ஞானம் உணர்வில் உணர்ந்து ஓங்கி வளர வேண்டும் என்றும்,
கந்தனாகிய முருகன் கண்களின் ஒளியாக, உள்ளத்தில் உணர்வாக,
என் உயிர்க்கும் உறவாக இருந்து அறிவும், செல்வமும்,
அன்பும் அருளும் பெருகிக் கண்களின் வழியாக ஒளியாக
ஊடுருவி கருணை வலிமை கொடுத்திட வேண்டும்’’
– என்று பாடுகிறார்.
ஞான வடிவாக நின்று உணர்விலே கலந்து மயில் போல ஊர்ந்து என் மனம் உன்னை வந்தடைய வேண்டும் என்று ஆன்மஞானத்தை உணரும் நெறியினைக் கூறுகிறார்.மேலும், கந்தகோட்டத்து முருகனே, ஆறுமுகனே, என் கண்களில் ஒளியாக இருப்பவனே என்று பாடி கண்களில் உள்ள ஒளியானது தன் உயிரில் ஊடுருவி அக்கினியை அடைந்து அதாவது தனது மூன்றாவது கண்ணை அடைய, வேண்டும் என்பது வள்ளலாரின் தியான வாக்காகும். இதுவே தியான அனுபவம் என்பதையும் உணர்த்துகிறார். மிகச் சிறந்த ஆன்மிக உண்மையை எடுத்துரைக்கும் வள்ளலார் தியான அனுபவத்தின் மூலம் கண்களின் வழியே ஆனந்த வடிவமாகிய கந்தனை ஞான உருவமாக நின்றவனை உணர்ந்து ஆன்ம ஞானத்தை அடையும் வழியினைப் புலப்படுத்துகிறார்.
தெய்வமணி மாலையின் ஆன்ம ஞானத் தத்துவம்
நம் கண்களில் ஒளி உள்ளது. அந்த ஒளிதான் ஞானம் மற்றும் இறைவனின் திருவடியாகவும் நம் உயிராகவும் அமைகிறது. அந்த ஒளியை உணர்தலே தவம் என்கிறார் வள்ளலார். சிறந்த அந்த ஞான ஒளியை உணர்வதற்கு சில கோட்பாடுகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை;
“கற்ற மேலவரோடு கூடி நில்லேன்
கல்வி கற்கும் நெறி நேர்ந்துகல்லேன்
குற்றமே செய்வது என் குணமாகும்
குற்றமெல்லாம் குணம் என கொள்வது நின் அருள் குணமாகும்’’ (தெய்வ மணி மாலை பாடல் -24)
– என்று பாடி இறைவனுடைய திருவடி அடைந்து ஞானம் பெரும் அறிவை முருகனிடத்தில் பெற்றதாகக் கூறுகிறார்.
அதாவது குற்றமே செய்தாலும் அவற்றைக் குணமாகக் கொண்டு நல்வழி காட்டி அருள் புரிந்து ஞானத்தைத் தந்த ஞானக் கடவுளாக முருகப் பெருமான் அமைந்துள்ளான் என்று கூறுகிறார். ஞானம் அருள் என்பது கண்கள் வழியாகச் செல்லக்கூடிய ஒளியானது நம் ஆன்மாவில் கலந்து சிறப்பதுதான் ஆன்ம ஞானம் என்பதை புலப்படுத்துகிறார்.
மனத்தூய்மை
ஆன்ம ஞானம் பெறுவதற்கு மனத்தூய்மை மிக முக்கியக் காரணியாக அமைகிறது. தூய்மையான மனதினைப் பெற நாம் எவ்வாறு வாழ வேண்டும்? என்பதை,
“ஒருமையுடன் நினது திருவடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று
பேசுவார் உறவு களவாமை வேண்டும்.
பெருமை பெறும் நினது புகழ் பேச
வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும்.
மதி வேண்டும். நின் கருணை நிதி
வேண்டும்.
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்’’ (தெய்வமணிமாலை பாடல்-5)
– என்று பாடுகிறார்
இவ்வரிகளில் மனதானது ஐம்புலன்களையும் அடக்கி ஒருமைப்பாட்டுடன் அமைந்து உனது திருவடியை நினைக்கின்ற உத்தமர்களின் உறவு எனக்கு வேண்டும். மனதிற்குள் ஒன்று வைத்து வெளியே ஒன்று பேசும் மனிதர்களின் உறவு கலவாமை வேண்டும். உன் புகழையே நான் பேச வேண்டும். பொய் பேசாதிருக்க வேண்டும் என்று இவற்றையெல்லாம் பெற்றத் தூய மனதுடன் நான் வாழ வேண்டும். அதற்கு உன் கருணை வேண்டும் என்று கருணைக்கடலான முருகப் பெருமானை வேண்டி நிற்கிறார் வள்ளலார். ஒருமைப்பட்ட மனதுடன் முருகனின் திருவடியை நினைத்தலே ஞானம் பெறுவதற்கான வழி என்பதை இங்கு வெளிப்படுத்துகிறார். மேலும்,
“நான் கொண்ட விரதம் உன் அடியலால்
பிறர் தமை நாடாமையாகும்
முத்திக்கு முதலான முதல்வனே
மெய்ஞான மூர்த்தியே முடிவில்லாத
முருகனே’’ (தெய்வமணிமாலை பாடல் – 30)
– என்று விளக்குகிறார்.
முத்தி பெறக் கண்கள் மூடித் தியானம் செய்யும் போது எனக்கு முதலில் வரும் காட்சி சண்முகம்தான். எனது இரு கண்மணியாய் என் இன்பமாய் இருப்பவன் முருகனே என்றும் எனக்குப் பேரின்பம் தருபவன் என்றும் விளக்குகிறார். வள்ளலார் கூறும் ஆன்ம ஞானத்தத்துவம் என்பது நம் உடலுக்குள், உயிருக்குள் கடவுளை உணர்வதாகும். நான் வணங்கும் கடவுள் நம் சரீரத்துக்குள் இருப்பவர் என்பதை உணர்வதே ஆன்ம ஞானம் ஆகும். இதையே திருமூலரும்;
“தேனுக்குள் இன்பம் கறுப்போ சிவப்போ
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!’’
(திருமந்திரம் பாடல் 3065)
– என்று பாடுகிறார்.
இக்கருத்தையே சிவவாக்கியரும்;
“மண்கலம் கவிழ்ந்த போது வைத்து வைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்த போது வேண்டுமென்று பேணுவார்
நன்கலம் கவிழ்ந்த போது நாறும் என்று போடுவார்
என் கலந்து நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே’’
(சிவவாக்கியம் பாடல்- 80)
– என்கிறார்.
இப்பாடலில் சிவவாக்கியர் என்னுள் கலந்து நின்று என்ன மாயம் செய்தாய் ஈசனே.. என்று பாடுகிறார். இக்கருத்துகள்யாவும் கடவுள் என்ற ஒன்று உள்ளே கிடப்பது அதாவது நம் உள்ளுக்குள் இருக்கக்கூடிய ஒன்றுதான் என்றும் இறைவன் நமக்குள்ளே இருக்கிறான் அதனால்தான் உள்ளே கிடக்கிறான் என்னும் உண்மையை வெளிப்படுத்தும் விதத்தில் உள்ளே கிடப்பது என்ற பொருளில் கட+உள் என்று பிரிந்து உள்ளே கிடப்பது என்ற பொருளில் கடவுள் என்ற சொல் அமைகிறது என்பதை இறையடியார்களின் பாடல்களின் வழி அறிய முடிகிறது. ஆன்ம ஞானத்தை வளர்த்துக் கொள்வதன் மூலம் நமக்குள் இருக்கும் இறை உணர்வை நாம் உணர்ந்து கொள்ள முடியும் என்பதுதான் வள்ளலாரின் தாரக மந்திரமாக அமைகிறது.
முருகப் பெருமானைக் கண்ணுக்குள் வாங்கி உயிருக்குள் நிறுத்தி மூன்றாவது கண்ணாகிய உணர்வில் கலப்பதே ஆத்ம ஞானம் என்பதை தெய்வமணி மாலையில் வலியுறுத்துகிறார். நிறைவாக மனிதர்கள், இறை நிலையை உணரக்கூடிய முறையினை இங்கு சொல்லிச் செல்கிறார் வள்ளலார்.
கூடு விட்டுக் கூடு பாயும் சித்து முறையினையும் மனிதர்களுக்கு அழிவு இல்லை என்ற கோட்பாட்டினையும் ஆழமாகக் கொண்டு ஆன்ம ஞானத்தை உணர்ந்தால் மனிதன் இவ்வுலகில் நிலைத்திருக்கலாம் என்னும் பேரின்ப நிலையை தெய்வமணிமாலை மூலமாக உணர்த்துகிறார். இதன் மூலம் கண்களின் ஒளியாக விளங்கும் தியான நிலையை ஓங்கச் செய்வதன் மூலம் முருகனின் அருளும் பேரின்பமும் ஆன்ம ஞானமும் நாம் அடையலாம் என்பது தெய்வமணி மாலையில் வள்ளலார் வெளிப்படுத்தும் ஆன்ம ஞானத் தத்துவ நெறியாக அமைகிறது.
முனைவர் இரா.கீதா
