×

ஏழுலோகநாயகி

கும்பகோணத்திற்கு அருகேயுள்ள மணலூர் எனும் கிராமத்திற்குள் அந்த மகாசக்தி லீலை புரிய அருவ நடந்தாள். அந்த அழகான குளத்திற்குள் இறங்கினாள். தாமரைத் தடாகத்தின் அழகைத் தாண்டிய ஒரு ஈர்ப்பு அந்த குளத்திற்கருகே எல்லோரையும் வரவழைத்தது. நிலாவினை விழுங்கி விட்டது போன்ற ஒரு வெளிச்சம் எப்போதும் அங்கு நிலவியது. கரையில் அமர்ந்து ஏதேதோ குடும்பக் கவலையில் மூழ்கியவர்களுக்கு சட்டென்று தீர்வு கிடைத்தது.

தியானத்திற்காக போராடும் ஒரு சில சந்நியாசிகள் தன்னை மறந்து அங்கேயே கிடந்தனர். குடும்பிகள் யாரிடமோ எல்லாவற்றையும் சொல்லிவிட்டதுபோல மனச்சுமை குறைந்து வீட்டிற்கு நடந்தார்கள். இரவு நேரங்களிலும், மனித நடமாட்டம் இல்லாத காலங்களிலும் சிறிய பெண்ணொருத்தி காலில் கொலுசு கட்டிக்கொண்டு ஓடுவதுபோன்று ஓசை நீரில் கேட்டபடி இருந்தது.

முதலில் நம்முடைய பிரமைதான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று எல்லோரும் சாதாரணமாக விட்டனர். ஆனால், தொடர்ந்து அந்த ஓசை எல்லோருக்கும் தெளிவாகக் கேட்டவுடன், ஆஹா… உள்ளுக்குள் சக்தி வீற்றிருக்கிறாள். அவள் வெளிப்பட விரும்புகிறாள் என்று விஷயம் தெரிந்தவர்கள் சற்று உரத்துச் சொன்னார்கள். ஊரார் திகைத்தனர். ‘சரி, தேடிப் பார்ப்போம்’ என்று குளத்திற்குள் இறங்கினர். ஓசை எங்கு வருகிறது என காதை கூர்மையாக்கி நீருக்குள் அலைந்தனர். நீருக்குள்ளேயே மெல்லிய வெளிச்சம் பூசியதுபோன்ற ஒரு இடத்தில் அகிலமனைத்தும் காக்கும் அம்பிகை சிலை வடிவில் மெல்லிய புன்முறுவல் பூத்த முகத்தோடு காட்சி தந்தாள்.

‘‘என்னை ஊரின் வடக்கு நோக்கி எடுத்துச் செல்லுங்கள். உரல் உலக்கை சத்தம் இல்லாத இடத்தில் என்னை அமர்த்துங்கள். நான் எப்போதும் உங்களை காப்பேன்’’ என்று மட்டும்
ஆணையிட்டாள்.ஊர் மக்களுக்கு அதென்ன உரல், உலக்கை சத்தம் கேட்காத இடம் என்று புரியவில்லை. அந்த குளத்தில் பூத்த நாயகியை ஏந்திக் கொண்டு கூட்டமாக சென்றனர். கிராமத்தை தாண்டினர். அப்போதும் எங்கேயோ ஓரிடத்தில் உரலின், உலக்கையின் சப்தங்கள் கேட்டுக் கொண்டுதான் இருந்தன.

கிராமத்தின் எல்லையை தாண்டும்போது காடு போன்ற ஓரிடத்தில் உரல், உலக்கை என மனிதர்களின் உபயோகமில்லாத இடத்தில் சிலையை இறக்கினர். மின்னல் போன்ற ஒளி அம்மையின் முகத்தில் தோன்றி மறைந்தது. மக்கள் மனம் நிறைந்தனர். அங்கேயே சிறு கோயிலாக கட்டினர். இன்றும் சூரியனார் கோயிலுக்கும், திருமாந்துறை எனும் பாடல் பெற்ற தலத்திற்கும் வடக்கு பகுதியில் காவல் தெய்வமாக ஏழுலோகநாயகி விளங்குகிறாள். வாருங்கள் கோயிலை வலம் வருவோம்.

ஏழுலோக நாயகி எனும் திருப்பெயர் இவளுக்கு ஏன் ஏற்பட்டது. இந்த அன்னையின் திருவுருவம் மிகவும் ஆச்சரியமானது. பிராம்மி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, மாஹேந்திரி, சாமுண்டா என்று அழைக்கப்படும் சப்த மாதர்களின் ஒன்று சேர்ந்த உருவமே ஏழுலோகநாயகி ஆகும். ‘பூத்தவளே புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம் காத்தவளே’ என்ற அபிராமி அந்தாதியின் சொல்லுக்கேற்ப ஈரேழு உலகங்களையும் ரட்சிப்பதால் இவளை ஏழுலோகநாயகி என்றழைக்கின்றனர். இந்த அன்னையின் அமைப்புள்ள சிலை அபூர்வமானது என்கின்றனர். சிலையை நன்கு கூர்ந்து நோக்கியவர்கள் இது சோழர்காலத்திய வேலைப்பாடுகள் நிறைந்தது என்று கூறுகின்றனர்.

அதுமட்டுமல்லது எப்போதுமே சோழர்களாகட்டும், பல்லவர்களாகட்டும் சிவாலயங்கள் கட்டுவதற்கு முன்பு குறிப்பிட்ட எல்லையில் காளிக்கு கோயில் எழுப்பி, அதற்குரிய தேவி மகாத்மியம் போன்ற அம்பாளின் வீரத்தைப் பேசும் புராணங்களை பாராயணம் செய்து அங்கு காளியன்னையின் சாந்நித்தியத்தை நிறுத்துவார்கள். பலியிடுதலும் இருக்கும். அதுபோல திருமாந்துறை கோயில் கட்டும்போது ஊரின் எல்லையை காக்க நிறுவப்பட்டதே இந்த ஆலயம் என்றும், காலப்போக்கில் மறைந்து மீண்டும் வெளிப்பட்டிருப்பதாகவும் சிலர் கருதுகின்றனர். கும்பகோணம் & மயிலாடுதுறை பாதையில் ஆடுதுறையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. சூரியனார் கோயிலுக்கு சென்று வருபவர்கள் அருகிலுள்ள இக்கோயிலையும் தரிசிக்கலாம்.

கிருஷ்ணா

Tags : Mahashakti Leela ,Manalur ,Kumbakonam ,lotus ,
× RELATED இருதய ஸ்தானத்தில் வீற்றிருக்கும் அம்பிகை