சென்னை: ஐபிஎல்லில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி வேகப்பந்து வீச்சாளரான, ஆஸ்திரேலியாவை சேர்ந்த நாதன் எல்லீஸுக்கு தொடையின் பின்புற தசை பகுதியில் காயம் (ஹாம்ஸ்டிரிங்) ஏற்பட்டுள்ளது. அதனால், ஐபிஎல் போட்டிகளில் அவர் ஆடமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. நாதன் எல்லீஸ் அணியில் இடம்பெற்றதால், ஐபிஎல் ஏலத்தின்போது, இலங்கை பந்து வீச்சாளர் மதீஷா பதிரனாவை சென்னை அணி ஏலம் எடுக்கத் தவறியது. தற்போது நாதன் எல்லிஸ் இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் வகையில் வேறு பந்து வீச்சாளர்களை சேர்ப்பதில் சென்னை அணி தீவிரம் காட்டி வருகிறது. ஆப்கானிஸ்தானின் ஃபஸல்ஹக் ஃபரூகி, தென் ஆப்ரிக்காவின் ஜெரால்ட் கோட்ஸீ, இங்கிலாந்து வீரர்கள் ரிச்சர்ட் கிளீஸன், ஜோஷ் டங், ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ஸீன் அபாட் ஆகியோரில் ஒருவர் சென்னை அணிக்கு தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
