×

உரிமை கோராமல் வங்கியில் ரூ.1 லட்சம் கோடி முடக்கம்; ‘ஹவுஸ்புல் 4’ திரைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா?.. ஒன்றிய அரசு வக்கீலிடம் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி

 

புதுடெல்லி: வாரிசுதாரர்கள் விபரங்கள் இல்லாத வங்கி கணக்குகளில் முடங்கிக்கிடக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் தொகையை மீட்பது தொடர்பாக புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் உயில் எழுதாமலோ அல்லது வாரிசுதாரர் விபரங்களை முறையாக குறிப்பிடாமலோ உயிரிழக்கும் பட்சத்தில், அந்த கணக்குகளில் உள்ள பணம் பல ஆண்டுகளாக உரிமை கோரப்படாமல் முடங்கிக் கிடக்கிறது. இவ்வாறு 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பாட்டில் இல்லாத கணக்குகளில் உள்ள பணம், ரிசர்வ் வங்கியால் நிர்வகிக்கப்படும் ‘டெபாசிட் தாரர் கல்வி மற்றும் விழிப்புணர்வு’ (டிஇஏ) நிதிக்கு மாற்றப்படுகிறது.

தற்போதுள்ள புள்ளி விபரங்களின்படி, இத்தகைய உரிமை கோரப்படாத பங்குகள் மற்றும் முதியோர் நல நிதி உள்ளிட்ட பல்வேறு அரசு நிதிகளில் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் தேக்கமடைந்துள்ளது. இந்த சூழலில், நிதித்துறை பத்திரிகையாளர் சுசேதா தலால் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘வாரிசுதாரர்கள் தங்கள் முன்னோர்களின் வங்கி கணக்கு விபரங்களை கண்டறிய ஒருங்கிணைந்த தேடுதல் வசதியுடன் கூடிய தரவுத்தளத்தை உருவாக்க வேண்டும். தற்போதுள்ள நடைமுறையில் சாதாரண மக்கள் தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை தேடி கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வந்தது. அப்போது ரிசர்வ் வங்கி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘கேஒய்சி மற்றும் வாரிசுதாரர் நியமனம் போன்ற பாதுகாப்பு நடைமுறைகள் ஏற்கனவே அமலில் உள்ளன. வங்கிகள் ஒரு அறங்காவலராக செயல்படுவதால், முறையான சரிபார்ப்பு இன்றி நிதியை விடுவிக்க முடியாது’ என்று வாதிட்டார். இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்த விபரங்களை பொதுவெளியில் வெளியிட்டால் போலி வாரிசுதாரர்கள் உருவாக வாய்ப்புள்ளது’ என்று கவலை தெரிவித்தனர். மேலும் நகைச்சுவையாக குறிப்பிட்ட நீதிபதிகள், ‘நீங்கள் ‘ஹவுஸ்புல் 4’ திரைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா? அந்த படத்தில் வருவது போல ஆள்மாறாட்டங்கள் மற்றும் வாரிசு உரிமை கோரும் குழப்பங்கள் இந்த விவகாரத்தில் நடக்கக்கூடும்’ என்று கருத்து தெரிவித்தனர்.

இருப்பினும், மக்கள் தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை எளிதாக பெறுவதற்கான தொழில்நுட்ப தீர்வுகளை ஏன் உருவாக்கக்கூடாது என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இது தொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி 4 வாரங்களுக்குள் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் மே 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ரிசர்வ் வங்கியின் ‘உத்கம்’ போர்டல் மூலம் உரிமை கோரப்படாத தொகையை தேடும் வசதி இருந்தாலும், அதனை மேலும் எளிமைப்படுத்த நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

Tags : Supreme Court ,Union government ,New Delhi ,Reserve Bank of India ,
× RELATED மாநிலங்களவையில் ஓய்வுபெறும் எம்பிக்களுக்கு பிரியாவிடை: பிரதமர் மோடி உரை