×

நடிகை பிரதியூஷா இறந்த வழக்கு காதலன் சித்தார்த்ரெட்டி கோர்ட்டில் சரண்: 24 ஆண்டுகளுக்கு பின் வழக்கு முடிந்தது

திருமலை: நடிகை பிரதியூஷா இறந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட அவரது காதலன் சித்தார்த்ரெட்டி உச்சநீதிமன்ற உத்தரவின்படி கோர்ட்டில் சரண் அடைந்தார். தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை பிரதியூஷா. இவர் தமிழில் நடிகர் முரளியுடன் மனுநீதி, பிரபுவுடன் சூப்பர் குடும்பம், விஜயகாந்த்துடன் தவசி உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். குறைந்த காலகட்டத்தில் தனது நடிப்பு திறமையில் வளர்ந்து வந்த நடிகை பிரதியூஷா, கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி பூச்சிக்கொல்லி கலந்த கூல்டிரிங்க்ஸை, காதலன் சித்தார்த்ரெட்டியுடன் சேர்ந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பிரதியூஷா இறந்தார். சித்தார்த்ரெட்டி குணமடைந்தார். இதையடுத்து பிரதியூஷா தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும், அவர் கொலை செய்யப்பட்டதாகவும் கூறி அவரது தாய் சரோஜா, கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிரதியூஷாவின் தற்கொலைக்கு சித்தார்த்ரெட்டியின் தூண்டுதல் காரணம் எனக்கூறி, அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து சித்தார்த்ரெட்டி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். விசாரித்த உயர்நீதிமன்றம் 5 ஆண்டு தண்டனையை 2 ஆண்டுகளாக குறைத்தது. ஆனாலும் இந்த 2 ஆண்டு தண்டனையை எதிர்த்து சித்தார்த்ரெட்டி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் கடந்த மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது.

அதில், உயர்நீதிமன்றத்தின் 2 ஆண்டு தண்டனை தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்றம், சித்தார்த்ரெட்டியின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் சித்தார்த்ரெட்டி 4 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சரணடையவேண்டும் என உத்தரவிட்டது. இதற்கிடையில் அமெரிக்காவுக்கு சென்று பல ஆண்டுகள் அங்கேயே தங்கியிருந்த சித்தார்த்ரெட்டி, உச்சநீதிமன்ற உத்தரவின்படி நேற்றுமுன்தினம் ஆந்திர மாநிலம் நம்பள்ளி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். நடிகை பிரதியூஷாவின் மரண வழக்கு தொடர்பாக காதலன் சித்தார்த்ரெட்டி, நீதிமன்றத்தில் சரண் அடைந்ததன் மூலம் இந்த வழக்கு 24 ஆண்டுக்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது.

Tags : Pratyusha ,Siddharth Reddy ,Tirumala ,Supreme Court ,Murali ,
× RELATED தென்மேற்கு ரயில்வேயில் 295 பணிக்கான...