×

ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து 2வது எல்பிஜி டேங்கர் கப்பல் குஜராத் துறைமுகம் வந்தது: சிறிய கப்பல் மூலம் எண்ணூர் துறைமுகத்திற்கு கொண்டு வரப்படும்

அகமதாபாத்: ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து, 46,500 மெட்ரிக் டன் சமையல் எரிவாயுவுடன் (எல்ஜிபி) 2வது இந்திய கப்பல் குஜராத் துறைமுகத்திற்கு வந்தடைந்தது. அங்கிருந்து சிறிய கப்பல் மூலம் எண்ணூர் துறைமுகத்திற்கு எரிவாயுவை மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. ஈரானுடன் இந்திய வெளியுறவு அமைச்சகம் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அங்கிருந்து இந்திய கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேற ஈரான் அனுமதி தந்துள்ளது.

இதன்படி, 2 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா நோக்கி வருவதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்திருந்தது. அதில் சிவாலிக் எனும் முதல் கப்பல் 45,000 டன் எல்பிஜி எரிவாயுடன் சரக்குடன் நேற்று முன்தினம் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை வந்தடைந்தது. இதைத் தொடர்ந்து, 46,500 மெட்ரிக் டன் எல்பிஜியுடன் நந்தா தேவி எனும் 2வது கப்பல் நேற்று அதிகாலை குஜராத்தின் துவாரகா மாவட்டத்தில் உள்ள வதினார் துறைமுகத்தை வந்தடைந்தது.

இது குறித்து தீனதயாள் துறைமுக ஆணையத்தின் தலைவர் சுஷில் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘46,500 மெட்ரிக் டன் எல்பிஜியுடன் சரக்கு கப்பல் வந்தடைந்துள்ளது. அதிலிருக்கும் எல்பிஜி துணை கப்பலுக்கு மாற்றப்படும். துணை கப்பல்கள் இங்கு வந்து நங்கூரமிட்டதும், மணிக்கு 1000 டன் என்ற வீதத்தில் எல்பிஜியை துணை கப்பலுக்கு மாற்றும் செயல்முறைகள் தொடங்கப்படும். பின்னர் அந்த கப்பல்கள் கிழக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள எண்ணூர் (தமிழ்நாடு), ஹால்டியா (மேற்கு வங்கம்) துறைமுகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த முழு பணியும் முடிய 2 நாட்கள் ஆகும்’’ என்றார். இன்னும் 22 இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Gujarat port ,Strait of Hormuz ,Ennore port ,Ahmedabad ,US ,
× RELATED விடுப்பு மறுக்கப்பட்டதால் வங்கி...