புதுடெல்லி: 24 எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டுக்கான சிறந்த எழுத்தாளர்களுக்கு தேசிய இலக்கிய அகாடமியானது சாகித்ய அகாடமி விருதுகளை அறிவித்துள்ளது. 24 மொழிகளை சேர்ந்த 24 எழுத்தாளர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளை அறிவிப்பதற்காக கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்டு இருந்த செய்தியாளர் சந்திப்பை அகாடமி திடீரென ரத்து செய்தது.
ஒரு சில மாதங்கள் கழிந்த நிலையில் நேற்று விருது பெறுவோரின் பட்டியலை அகாடமி வெளியிட்டது. இது குறித்த அறிக்கையில், ‘‘சாகித்ய அகாடமியால் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளுக்கான ஆண்டு சாகித்ய அகாடமி விருதுகளை அறிவிப்பதில் அகாடமி மகிழ்ச்சி அடைகிறது. 8 கவிதை நூல்கள், 4 நாவல்கள், 6 சிறுகதை தொகுப்புகள், 2 கட்டுரை நூல்கள், ஒரு இலக்கிய விமர்சன நூல், ஒரு சுயசரிதை மற்றும் 2 நினைவு குறிப்பு ஆகியவை 2025ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகளை வென்றுள்ளன.
ஆங்கில எழுத்தாளர் நவதேஜ் சர்னாவுக்கு கிரிம்சன் ஸ்பிரிங் என்ற ஆங்கில நாவலுக்காகவும், மம்தா காலியாவுக்கு ஜீடி ஜீ அலகாபாத் என்ற நூலுக்காகவும், தமிழில் தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் நூலுக்காக ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் சாகித்ய அகாடமி விருதை பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வருகின்ற 31ம் தேதி நடைபெறும் விழாவில் விருது பெற்றவர்களுக்கு செப்பு பட்டயம், பொன்னாடை மற்றும் ரூ.1லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
