×

தேர்தல் தேதி அறிவித்த அடுத்த நாளே மேற்கு வங்கத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜ

 

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த மாதம் 23 மற்றும் 29ம் தேதி இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 152 தொகுதிகளிலும் , இரண்டாவது கட்டமாக 142 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகின்றது. மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கின்றது. நேற்று முன்தினம் ஞாயிறன்று தேர்தல் ஆணையம் மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் தேதியை அறிவித்தது. இந்நிலையில் அதற்கு அடுத்த நாளே மேற்கு வங்கத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியலை பாஜ நேற்று வெளியிட்டது. 144 பெயர்களுடன் முதல் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி, நந்திகிராம் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜியின் தொகுதியான பவானிப்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நேரடி சவால் விடுக்கப்பட்டுள்ளது.

நந்திகிராம் தொகுதியில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் 1900 வாக்குகள் என்ற குறைந்த வித்தியாசத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியை சுவேந்து அதிகாரி தோற்கடித்தார். பவானிப்பூர் தொகுதியில் 2021ல் நடந்த இடைத்தேர்தலில் 58 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று மம்தா பானர்ஜி சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முதல்வர் மம்தா பானர்ஜிக்கு போட்டியாக சுவேந்து அதிகாரியை பாஜ மீண்டும் களமிறக்கியுள்ளது.

இதேபோல் இடது முன்னணி சார்பில் மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கான 192 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மாநிலங்களவை உறுப்பினர் பிகாஷ் ரஞ்சன் படடாச்சார்யா மற்றும் மார்க்சிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினர் மீனாட்சி முகர்ஜி ஆகியோர் வேட்பாளர்களாக இடம்பெற்றுள்ளனர்.

Tags : BAJA ,WEST BENGAL ,Kolkata ,
× RELATED கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு...