கொல்கத்தா: தமிழ்நாடு, மேற்கு வங்கம் உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில் மேற்கு வங்கத்தில் 2 கட்டமாக தேர்தல் வரும் ஏப்ரல் 23, 29ம் தேதிகளில் நடக்கிறது. வாக்குகள் வரும் மே 4ம் தேதி எண்ணப்படுகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் தலைமை செயலாளர் நந்தினி சக்ரவர்த்தி, உள்துறை செயலாளர் ஜகதீஷ் பிரசாத் மீனா ஆகியோரை தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்து அறிவித்தது.
அதைத் தொடர்ந்து நேற்று காலை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் போலீஸ் டிஜிபி, பியூஷ் பாண்டே, கொல்கத்தா கமிஷனர் சுப்ரதிம் சர்க்கார் உள்ளிட்ட மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்தது. இவர்களுக்கு பதிலாக புதிய தலைமை செயலாளராக மாநிலத்தில் வட வங்க மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் துஷ்யந்த் நரியாலாவும், புதிய உள்துறை செயலாளராக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை செயலாளர் சங்கமித்ரா கோஷ், புதிய டிஜிபியாக சித் நாத் குப்தா, கொல்கத்தா போலீஸ் ஆணையராக அஜய் குமார் நந்தா நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த உத்தரவுகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் நேற்று மாலை 3 மணிக்குள் இடமாற்றம் செய்யப்பட்ட அனைத்து அதிகாரிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய அலுவலகங்களில் பொறுப்பேற்றது குறித்த அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் இடமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு தேர்தல் தொடர்பான எந்த பொறுப்பும் வழங்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் தேர்தலை வன்முறையின்றி அமைதியாக நடத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தேர்தல் அதிகாரிகள் கூறினர்.
மேலும், கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தல் மற்றும் 2024 மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவை பதிவு செய்ய வெப்கேமரா வழங்கிய ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. அந்த வீடியோ பதிவில் பல்வேறு முக்கிய முறைகேடுகள் கண்டறியப்பட்டிருப்பதாலும், 30 சதவீத கேமராக்கள் எந்த பதிவையும் செய்யவில்லை என்பது ஆய்வில் கண்டறியப்பட்டதாலும் ஒப்பந்ததாரர் மாற்றப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. இந்த முறை புதிய டெண்டர் மூலம் மாநிலத்திற்கு வெளியில் இருந்து 3 ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் வீடியோ கேமராக்களை சப்ளை செய்வார்கள் என தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் இத்தகைய நடவடிக்கை மேற்கு வங்க அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* உபியில் இப்படியெல்லாம் நடக்காதது ஏன்: அகிலேஷ்
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று பேட்டி அளித்த சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ‘‘தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே, பாஜ ஆட்சி செய்யாத மாநிலங்களில் அக்கட்சிக்கு ஆதரவான உயர் அதிகாரிகள் மாற்றப்படுவது வாடிக்கையாகி விட்டது. ஆனால் பாஜ ஆளும் உபி போன்ற மாநிலங்களில் இதுபோல் நடப்பதில்லை. அங்கு பல குற்றச்சாட்டுகள் கூறிய போதிலும் கூட டிஜிபி மாற்றப்பட்டதே இல்லை ’’ என்றார்.
* திரிணாமுல் காங். வெளிநடப்பு
மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தில் இவ்விவகாரத்தை எழுப்பிய திரிணாமுல் காங்கிரஸ் மூத்த எம்பி டெரெக் ஓ பிரையன், ‘‘நள்ளிரவில் உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இப்படி செய்ய அவர்களிடம் அனைத்து அதிகாரங்களும் உள்ளன’’ என்றார். இதற்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, ‘‘தேர்தல் ஆணையம் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு ’’ என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
* அசாமில் 5 எஸ்எஸ்பிக்கள் இடமாற்றம்
தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் டிஜிபி மற்றும் ஏடிஜிபி, ஐஜி, சிஐடி, லஞ்ச தடுப்பு பிரிவு போலீசார் என பல உயர் அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில், அசாமில் 5 மூத்த எஸ்பிக்கள் மாற்றப்பட்டுள்ளனர். மஜுலி, தென் சல்மாரா, சாடியா, சிரங், தேமாஜி ஆகிய மாவட்டங்களின் எஸ்எஸ்பிக்கள் 5 பேர் உடனடியாக இடமாற்றம் செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. மேற்கு வங்க மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்ற விவகாரம் கடும் சர்ச்சையான நிலையில் பாஜ ஆளும் அசாமில் 5 எஸ்எஸ்பிக்கள் மாற்றப்பட்டதாக அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
