திருப்போரூர், மார்ச் 17: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்து ஏமாற்றியதால் மாணவி தற்கொலை செய்து இறந்த வழக்கில் முன்னாள் காவலருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சென்னை அல்லிகுளம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வியாசர்பாடி பகுதியை சேர்ந்த கேட்டரிங் டிப்ளமோ படித்து வந்த மாணவிக்கும், புழல் சிறை கண்காணிப்பாளரின் பாதுகாப்பு பணியில் இருந்த அரக்கோணம் அருகேயுள்ள பர்வத்தூர் கிராமத்தை சேர்ந்த மகேஷ் (27) என்ற இரண்டாம் நிலை காவலருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. கொரோனா காலமான 2020ம் ஆண்டில் இருவரும் அடிக்கடி பேஸ்புக் மூலமும் செல்போன் மூலமும் பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. மாணவியை திருமணம் செய்வதாக மகேஷ் ஆசை வார்த்து கூறிவந்துள்ளார்.
இந்த நிலையில், 2020 ஜூலை மாதம் மாணவியை கோவளத்திற்கு கடத்தி சென்ற மகேஷ் அங்கு ஒரு லாட்ஜில் வைத்து மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். இதனால், மாணவி கர்ப்பமானார். இதையடுத்து, கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வதாக கூறி மாணவியின் கர்ப்பத்தை கலைத்துள்ளார் இந்நிலையில், கடந்த 2020 நவம்பர் மாதம் மாணவிக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, நவம்பர் 19ம் தேதி மாணவி உடலில் கெரசினை ஊற்றி தற்கொலை செய்துள்ளார். இறப்பதற்கு முன்பு மரண வாக்குமூலமும் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி மகேஷை கைது செய்தனர். அவர் மீது பாலியல் பலாத்காரம், மரணத்திற்கு காரணம் மற்றும் போக்சோ வழக்கு ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு அல்லிகுளம் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.பிரபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் ஏ.எம்.ரவீந்திரநாத் ஜெயபால் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் மகேஷுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சத்து 1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த அபராத தொகையில் ரூ.90 ஆயிரத்தை இறந்துபோன மாணவியின் குடும்பத்திற்கு தரவேண்டும். மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.5 லட்சத்தை தமிழக அரசு தரவேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.
