பெரும்புதூர், மார்ச் 16: சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பாதுகாப்பை பலப்படுத்தவும், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யவும் துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பு பேரணி நடத்தி வருகின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் காவல் நிலைய கட்டுபாட்டு பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்யும் விதமாக ராணுவ அசிஸ்டன்ட் கமாண்டர் சுஜித் தலைமையில் நேற்று கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில், 60க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்தியவாறு, மணிமங்கலம் காவல் உதவி ஆணையர் சுந்தர் தலைமையில் 30க்கும் மேற்பட்ட காவலர்களும் மணிமங்கலம் ஆலடி அம்மன் கோயில் அருகில் இருந்து பேரணியாக சென்றனர். இந்த பேரணி மணிமங்கலம் பஜார் வீதி, அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக 1 கிமீ சென்று காவலர்கள் குடியிருப்பு பகுதியில் நிறைவடைந்தது.
