- இந்தியன் வெல்ஸ் டென்னிஸ்
- சபலெங்கா
- இந்தியன் வெல்ஸ்
- அரினா சபலெங்கா
- இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ்
- ஐக்கிய மாநிலங்கள்
இண்டியன்வெல்ஸ்: இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் நேற்று, உலகின் நம்பர் 1 வீராங்கனை அரீனா சபலென்கா அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
அமெரிக்காவில் இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டி ஒன்றில் பெலாரசை சேர்ந்த உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா (27), செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவா (21) மோதினர். போட்டியின் துவக்கம் முதல் அட்டகாச ஆட்டத்திறனை வெளிப்படுத்திய சபலென்கா 6-3 என்ற புள்ளிக்கணக்கில் முதல் செட்டை வசப்படுத்தினார்.
தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் அவரது ஆதிக்கமே காணப்பட்டது. அந்த செட்டை சபலென்கா 6-4 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். அதனால் 2-0 என்ற நேர் செட்களில் வெற்றிவாகை சூடிய அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதிப் போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபாகினா (26), உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா (31) களம் கண்டனர். முதல் செட்டில் இருவரும் புள்ளிகளை பெறும் முனைப்புடன் தீவிரம் காட்டினர். கடைசியில் அந்த செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் ரைபாகினா கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய ரைபாகினா, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் அந்த செட்டை வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வென்ற அவர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் சபலென்கா, ரைபாகினா மோதவுள்ளனர்.
