×

சுவிஸ் ஓபன் பேட்மின்டன் தருணுக்கு காலிறுதியில் தடைபோட்ட கின்டிங்

பேஸல்: சுவிஸ் ஓபன் பேட்மின்டன் காலிறுதிப் போட்டியில் நேற்று இந்திய வீரர் தருண் மன்னெபெள்ளி, இந்தோனேஷிய வீரர் அந்தோணி சினிசுகா கின்டிங்கிடம் தோல்வியை தழுவினார். சுவிஸ் ஓபன் பேட்மின்டன் போட்டிகள் பேஸல் நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த காலிறுதிப் போட்டி ஒன்றில் இந்திய வீரர் தருண் மன்னெபள்ளி – இந்தோனேஷிய வீரர் அந்தோணி சினிசுகா கின்டிங் உடன் மோதினார். துவக்கம் முதல் இரு வீரர்களும் சிறப்பாக ஆடி புள்ளிகளை பெற முனைப்பு காட்டினர்.

நீண்ட நேரம் நீடித்த முதல் செட்டை 21-19 என்ற புள்ளிக்கணக்கில் கின்டிங் கைப்பற்றினார். 2வது செட்டில் சுதாரித்து ஆடிய தருண் 21-19 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்றார். அதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் வகையில் நடந்த 3வது செட்டில் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்திய கின்டிங் 21-13 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் அந்த செட்டை வசப்படுத்தினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அவர் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதிப் போட்டியில் ஜப்பான் வீரர்கள் யூஷி தனகா, கோகி வடனபே மோதினர். முதல் செட்டில் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய யூஷி 21-14 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் சிறப்பாக ஆடிய அவர் 21-17 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டையும் கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய அவர் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இன்று நடக்கும் அரையிறுதிப் போட்டியில் யூஷி தனகா, கின்டிங் மோதவுள்ளனர். மற்றொரு அரையிறுதியில் சீன வீரர் லி ஷிபெங், இந்தோனேஷிய வீரர் அல்வி ஃபர்ஹான் அல்ஹாஸ்னி மோதவுள்ளனர்.

Tags : Swiss Open badminton ,Tarun Manneppeli ,Anthony Sinisuka Kinding ,Basel ,
× RELATED சில்லி பாய்ன்ட்…