×

தமிழிசைக்கு எதிராக கோஷம் எழுப்பிய மாணவி கைதான விவகாரம் போலீசாருக்கு எதிரான மனித உரிமைகள் ஆணைய உத்தரவு ரத்து: ஐகோர்ட் அதிரடி

 

சென்னை: கடந்த 2018ம் ஆண்டு தமிழக பாஜ மாநில தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் பயணித்த தூத்துக்குடி விமானத்தில், உடன் பயணித்த ஆராய்ச்சி மாணவி லூயிஸ் சோபியா, பாசிச பாஜ ஆட்சி ஒழிக என்று கோஷம் எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக, தமிழிசை சவுந்தரராஜன் விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை போலீசார், சோபியாவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இதையடுத்து, போலீசார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி சோபியாவின் தந்தை ஏ.ஏ.சாமி, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். இந்த புகாரை விசாரித்த மனித உரிமை ஆணையம், சோபியா கைது செய்யப்பட்டதன் மூலம் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி, போலீசாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட சோபியாவுக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டிருந்தது. இழப்பீடு தொகையை சம்பந்தப்பட்ட போலீசாரிடம் வசூலிக்கவும் ஆணைம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து அப்போது புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளராக இருந்த திருமலை, அப்போதைய தூத்துக்குடி கூடுதல் எஸ்.பி பொன்ராமு உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், ஷமீம் அஹமது அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடங்களில் எடுக்கும் உடனடி முடிவுகளை குறைகூற முடியாது. குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை குறித்து புலன் விசாரணையில் தான் தெரியவரும் என்பதால் மனித உரிமை ஆணையம் தனது வரம்பை மீறி காவல்துறைக்கு இணையான விசாரணை நடத்தி முன் முடிவுக்கு வர முடியாது. எனவே, சோபியாவுக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமாறும் மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

Tags : Tamilisai ,High Court ,Human Rights Commission ,Chennai ,Louise Sophia ,Tamil Nadu ,BJP ,Soundararajan ,Thoothukudi ,Tamilisai… ,
× RELATED சென்னையில் அரைநூற்றாண்டு வளர்ச்சியை 5...