×

ரூ.13 ஆயிரம் கோடியில் நிறுவப்பட்ட உடன்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

 

சென்னை: தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் ரூ.13,077 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள அனல் மின் நிலையத்தின் அலகு 1-ல் மின் உற்பத்தியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் ரூ.13,077 கோடி ரூபாய் செலவில் பாரத மிகுமின் நிறுவனம் வாயிலாக நிறுவப்பட்டுள்ள 2X660 மெகாவாட் மிக உய்ய அனல் மின் நிலையத்தின் அலகு 1-ன் பணிகள் முடிக்கப்பட்டு, பல்வேறு கட்ட சோதனை ஓட்டங்களுக்கு பிறகு சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்தபடி முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கான மின்உற்பத்தியை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனங்களின் தலைவர் ராதாகிருஷ்ணன், எரிசக்தித்துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா, இயக்குநர் (திட்டங்கள்) ஜான் டால்டன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். காணொலிக் காட்சி வாயிலாக தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்சண்முகையா, தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநர் கோவிந்த ராவ், மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

உடன்குடி மிக உய்ய அனல் மின் நிலையத்தின் சிறப்பு அம்சங்கள்: மிக உய்ய நிலை வெப்ப தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிறுவப்படும் அனல் மின்நிலைய திட்டங்கள் பிற அனல் மின் திட்டங்களை ஒப்பிடும் போது, 5 முதல் 6 சதவீதம் வரை அதிக திறன்மிக்கது ஆகும். இதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்க்கு எரிபொருள் செலவு குறைவதுடன் மின் உற்பத்தியினை தொடங்குவதற்கு குறைவான நேரமே தேவைப்படும்.

கடலோரத்தில் பிரத்யேகமாக 9 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்ட துறைமுகத்தின் நிலக்கரி இறங்குதளங்கள் மூலம் இரண்டு முழுவதும் மூடிய அமைப்புள்ள கன்வேயர் பெல்ட் வாயிலாக மணிக்கு தலா 2000 டன் நிலக்கரியை நேரடியாக மின் நிலையத்திற்கு கொண்டு செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் நிலக்கரி போக்குவரத்து செலவு குறைந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய எரிபொருள் விநியோகம் சீராக நடைபெற உதவுகிறது.

இத்திட்டத்தின் மூலம் ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய நிலக்கரி நுகர்வு 0.50 முதல் 0.55 கிலோ கிராம் அளவு மட்டுமே தேவைப்படுவதால், கார்பன்-டை-ஆக்சைடு உமிழ்வு 25 முதல் 30 சதவீதம் வரை குறைந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த திட்டமாகவும் உள்ளது. இம்மின் நிலையத்திற்கு தேவையான குளிரூட்டும் கோபுரம், பாய்லர், பணியாளர் குடியிருப்புகள் உள்ளிட்ட அனைத்து தண்ணீர் தேவைகளுக்கும் அனல் மின்நிலைய வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள நாளொன்றுக்கு 13 மில்லியன் லிட்டர் கொள்ளவுள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வாயிலாகவே பெறப்படுவதால் நிலத்தடி நீர் மற்றும் தாமிரபரணி நீர் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

இந்த மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, 400 கிலோ வோல்ட் வளிம காப்பு துணைமின் நிலையம் வாயிலாக மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு மின் பகிர்மானம் செய்யப்படும். மாநிலத்தின் மின்சாரத் தேவையினை பூர்த்தி செய்ய துணைபுரிவதுடன், வெளிசந்தையில் மின் கொள்முதல் செய்வது குறைக்கப்படும்.

இதனால் மின்சார வாரியத்தின் நிதி நிலை மேம்படுவதுடன் நம் மாநிலத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய பங்களிக்கும். உடன்குடி மின் திட்ட வளாகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ஒன்றரை இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை 52 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம், தமிழ்நாடு 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் வளர்ச்சி என்ற இலக்கினை அடைய ஏதுவாகவும், தென் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், மின்சார தேவைக்கும் முக்கிய பங்களிப்பை அளிக்கும். மின்உற்பத்தி திறன் மேலும் வலுப்பெற்று, மின்விநியோகம் மேம்படுவதுடன் தொழில், வேளாண்மை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவையான மின்சாரம் நிலையான முறையில் வழங்கப்படுவதற்கு பேருதவியாக இருக்கும் என்பதில் மாற்றுகருத்தில்லை.

Tags : Udangudi Thermal Power Plant ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Unit ,Udangudi, Thoothukudi district ,Bharat Mikumin… ,
× RELATED சென்னையில் அரைநூற்றாண்டு வளர்ச்சியை 5...