×

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம், நாகை மீனவர்கள் விமானத்தில் சென்னை வந்தனர்

 

சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம், நாகை மீனவர்கள் 14 பேர் விமானத்தில் சென்னை வந்த நிலையில், மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி, விசைப்படகில் கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது இலங்கை கடலோர காவல் படையினர், ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்து இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதேபோல், கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி, நாகப்பட்டினத்தை சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடலோர காவல் படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு அவசர கடிதம் எழுதினார்.

இந்நிலையில், இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, இலங்கை நீதிமன்றம், இந்திய மீனவர்கள் 14 பேரையும் விடுதலை செய்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து, இந்திய தூதரக அதிகாரிகள் 14 மீனவர்களுக்கும் எமர்ஜென்சி சர்டிபிகேட்கள் வழங்கி, விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்தனர்.

மேலும், விமான டிக்கெட்களுக்கும் ஏற்பாடு செய்தனர். அதனைத்தொடர்ந்து, நேற்று இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், மீனவர்கள் 14 பேரும், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை வரவேற்று, தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்திருந்த, வாகனங்கள் மூலம், அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags : Rameswaram ,Nagaland ,Chennai ,Fisheries Department ,
× RELATED சென்னையில் அரைநூற்றாண்டு வளர்ச்சியை 5...