×

‘குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்’கொலையான மாணவியின் பெற்றோருக்கு கனிமொழி ஆறுதல்: சகோதரிக்கு வேலை: குடும்பத்துக்கு இழப்பீடு: அமைச்சர் கீதாஜீவன் உறுதி

 

குளத்தூர்: தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். மாணவியின் பெற்றோருக்கு கனிமொழி எம்பி நேரில் ஆறுதல் தெரிவித்து உள்ளார். மாணவியின் சகோதரிக்கு வேலை மற்றும் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மகளான 17 வயதுடைய பிளஸ்2 மாணவி, கடந்த 10ம் தேதி இரவு வீட்டின் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றவர் நீவீடு திரும்பவில்லை. மறுநாள் மாலை காட்டுப்பகுதியில் மாணவியின் சடலம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத போலீசாரின் அலட்சியத்தை கண்டித்தும், மாணவியை கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், 11ம் தேதி நள்ளிரவு 12.30 மணி வரை மாணவியின் உறவினர்கள், கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் கூறியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

நேற்று முன்தினம் (12ம் தேதி) காலை வரை குற்றவாளிகள் கைது செய்யப்படாததால் மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குச்சாலை விலக்கில் உறவினர்கள், கிராம மக்கள் என 100க்கும் மேற்பட்டோர் திரண்டு காலை 9 மணி முதல் இரவு 9மணி வரை 12 மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் மாவட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் இரவு 9 மணியை கடந்தும் மறியல் போராட்டம் தொடர்ந்தது.

அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்எல்ஏ உள்ளிட்டோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவி கொலையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். கொலை செய்யப்பட்ட மாணவியின் சகோதரிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து விசாரணை நடக்கிறது.

மாணவியின் சகோதரி படித்துக் கொண்டிருக்கிறார். அவர் படிப்பை நிறைவு செய்யட்டும். அவருக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர். இதையடுத்து இரவு 10.30 மணியளவில் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பின்னர் வேடநத்தம் மற்றும் குளத்தூர் ஆகிய இடங்களில் போராட்டத்தை தொடர்ந்தனர். நேற்று அதிகாலை 6 மணியளவில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என போலீசார் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஆனாலும், குற்றவாளிகளை கைது செய்த பிறகே மாணவியின் உடலை பெற்றுக் கொள்வோம் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று மாணவியின் பெற்றோரை நேரில் சந்தித்து கனிமொழி எம்பி ஆறுதல் தெரிவித்தார். அப்போது அமைச்சர் கீதாஜீவன் உடனிருந்தார்.

Tags : Kanimozhi ,Minister ,Geethajeevan ,Kulathur ,Thoothukudi ,
× RELATED சென்னையில் அரைநூற்றாண்டு வளர்ச்சியை 5...