நன்றி குங்குமம் டாக்டர்
உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் அன்றாட சிக்கல்களை தவிர்ப்பதை நோக்கமாக கொண்டு அவர்களுக்கான கொள்கைகளை உருவாக்கவும், விழிப்புணர்வுகளை மேற்கொள்ளும் பொருட்டு இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆட்டிசம் உலகளாவிய பிரச்னையாக பார்க்கப்படுவதால் அதிக கவனமும் பெறுகிறது. அவர்களின் தனித்துவமான திறன்களை கண்டறிந்து ஊக்குவிக்கும் விதமாக இந்த ஆண்டு அதற்கான கொள்கையை ஐ.நா சபை வகுத்துள்ளது.
“வீடு, பணியிடம், கலைகள் மற்றும் கொள்கைகளை வகுப்பதில் பங்களிப்பு’’ என்று பொருள் கொள்ளும்படி ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கபட்டவர்களை ஏற்றுக் கொள்ளும்வகையில் கருப்பொருளை உருவாக்கி உள்ளது. “உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். ஒரு போதும் நிறுத்தாதீர்கள்’’ என்கிறார் ஸ்டீபென் வில்ட்ஷயர். ஆட்டிசம் குறித்து செயன்முறை சிகிச்சையாளர் (Occupational Therapist) அ.மோகன்ராஜ் அவர்களிடம் பேசினோம்.
ஆட்டிசம் குறைபாடு என்றால் என்ன?
ஆட்டிசம் குறைபாடு என்பது குழந்தை திறன் வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகளில் ஒன்று. மூளையின் ஆரம்ப வளர்ச்சியின்போது ஏற்படும் நுண்மையான மாற்றங்களினால் சில நுட்பமான மன வேறுபாடுகள் உண்டாகின்றன. இவை குழந்தைகள் வளரும் போது பல வளர்ச்சிப் பின்னடைவுகளாகவும், பலவிதமான அறிகுறிகளாகவும் வெளிப்படுகின்றன. பொதுவாக தகவல் தொடர்புச் சிக்கல்கள், பேச்சு மொழி மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் திறன், மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான நடவடிக்கைகள், இறுக்கமான மன நிலை போன்ற அறிகுறிகள் ஆட்டிசத்தை அடையாளப்படுத்தும் முக்கியமான பண்புகள்.
ஆட்டிசத்திற்கான முறையான சிகிச்சை முறைகள் என்னென்ன?
ஆட்டிசம் முழுவதும் குணப்படுத்தி விட முடியாத குறைபாடு. தனி நபர் சிகிச்சை முறைகளை காட்டிலும் குழுவாக இணைந்த நடத்தை சிகிச்சை முறைகள் நல்ல பலனை தருவதாக இருக்கிறது. பேச்சுப் பயிற்றுனர் மூலம் பிறரை தொடர்புகொள்ளும் திறனை அறிந்து பேச்சுத்திறனை மேம்படுத்த முடியும். உதாரணமாக சைகைத்திறனை மேம்படுத்தி தொடர்பு கொள்ளச்செய்வது. குழந்தைகள் உளவியலாளர், வளர்ச்சிப் பரிணாமங்களை மதிப்பிட்டு, கற்றல் குறைபாடுகளைக் கண்டறிவதில் முக்கியமான பங்காற்றுகின்றனர்.
செயல்வழி பயிற்றுனரின் வழிகாட்டுதலில் புலனுணர்வு சிகிச்சை முறைகள் மூலம் அன்றாடத் தேவைகளை நடவடிக்கைகளை இயல்பாக செய்யப் பழக்குவிக்க முடியும். புலங்களின் திறன் மேம்பாட்டு பயிற்சிகள், உடலியக்கத் திறனை மதிப்பிடுவது, சுய உதவித் திறனை மேம்படுத்துவது, கண் பார்த்து கைகள் செய்யும் செயல்களை ஒருங்கிணைப்பது உணர்வுகளை சீராகக் கையாள்வது போன்றவைகளை பயிற்சிகள் மூலம் மேம்படுத்த முடியும். இவர்களோடு பெற்றோர்களும் சமூகமாகவும் இணைந்து செயலாற்ற வேண்டும்.
ஆட்டிசம் பாதிக்கபட்ட குழந்தைகளுக்கு வகுப்பறையில் என்ன மாதிரியான மாற்றங்களை செய்தால் அவர்களுக்கு இலகுவானதாக இருக்கும்?
மன இறுக்கம் கொண்ட மாணவர்களுக்கு கற்றல் சமூகத் திறன்கள் மற்றும் தகவல் தொடர்புகள் ஆகியவற்றுடன் தனிபட்ட தேவைகள் இருக்கும், இதை ஆசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு மாணவரைப் பற்றியும் தனிப்பட்ட முறையில் அறிந்துகொள்ள, அந்த மாணவரால் தனது திறனை வெளிப்படுத்த திறன் இருக்கும் பட்சத்தில் அந்த மாணவரிடமே அவர்களின் முழுத் தகவலைக் கேட்டுப் பெற வேண்டும். இதன் மூலம் அவர்களைக் குறித்த ஆர்வமுள்ள தகவலை பகிர்ந்துக்கொள்வார்கள். அவர்களுக்கு விருப்பமான முறையில் கல்வி கற்கும் வாய்ப்பை வழங்க வேண்டும். பரிசுகள் அளித்து ஊக்குவிக்க வேண்டும்.
அவர்களுக்குப் பிடித்த பாடங்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகளை வழங்க வேண்டும். மாணவர்கள் அச்சப்படாத வகையில் கற்பித்தல் உத்திகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அவர்களுக்கு ஓய்வு தேவைப்படும் போது அதை அவர்களுக்கு மறுக்க கூடாது. இதெல்லாம் மிகச்சிறிய விடயமாக நமக்குத் தோன்றக் கூடும். ஆனால், ஆட்டிசம் பாதிக்கப் பட்ட குழந்தைகள் புறக்காரணிகளால் அதிகம் உணர்ச்சிவசப் படுகிறவர்களாக இருப்பார்கள். எளிய வகுப்பறை மாற்றம் கற்றல் திறனை மேம்படுத்தும்.
ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான கல்வி உரிமைகள் இங்கு எந்த அளவில் உள்ளது?
தமிழ்நாட்டில் சிறப்புத் தேவைகள் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் மருத்துவர்கள், உளவியலாளர்கள், செயன்முறை சிகிச்சையாளர், பேச்சு பயிற்சியாளர், சிறப்பு கல்வியாளர் என அனைவரையும் உள்ளடக்கிய குழுவாக இணைந்து இயங்கக்கூடிய சூழ்நிலை உள்ளது. மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் சிறப்பு வழிகாட்டும் குழு உள்ளது. பள்ளிக் கல்லூரிகளும் அவர்களுக்கான சிறப்புக் கல்வியை வழங்குகிறது. அவரவர்களின் குறைபாடுகளின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப வெவ்வேறு விதமான பள்ளிகளில் ஒருங்கிணைக்கப்படுகிறார்கள். மிதமான குறைபாடு உடைய குழந்தைகள் அனைவரும் ஒருங்கிணைந்த பள்ளிகளிலே சேர்த்துக் கொள்ளலாம். கொஞ்சம் தீவிரத்தன்மை அதிகம் கொண்ட, ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு உடைய குழந்தைகள் சிறப்புப் பள்ளிகள் மூலம் கல்வி மற்றும் தொழிற்கல்வி படிப்புகள் வழங்கப் படுகின்றன. இந்தச் சூழல் இன்னும் மேம்பட வேண்டும்.
ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியாவில் வேலைவாய்ப்பு திட்டங்கள் எந்த அளவுக்கு உள்ளன?
வேலை வாய்ப்பின்மை, பொருளாதார நெருக்கடிகள் மிகுந்துள்ள காலகட்டத்தில், வேலை வாய்ப்புகள் மிகுந்த சவாலான ஒன்றாக இருக்கிறது. துரிதகதியில் இயங்கும் நாம் மற்றவர்களின் குரலை செவிமெடுக்கவே தயங்கும் காலத்தில் நிதானமாக இயங்கும் அல்லது அதி துரிதமாக இயங்கும் ஒருவருக்கு வேலைவாய்ப்பை பெறுவது மிகுந்த கடினமான ஒன்றாக இன்றும் இருக்கிறது. அறிவார்ந்த சமூகமாக இயங்கும் நாம் ஒவ்வொருவருக்குமான உரிமையை வழங்க வேண்டியது நமது கடமையாக இருக்கிறது.
எர்ன்ஸ்ட் & யங் (Ernst & young) நிறுவனம் முன்னுதாரணமான நிறுவனமாக திகழ்கிறது. செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் முக்கிய பங்களிப்பாக ஆட்டிசம் பாதிக்கபட்டவர்களைப் பணியில் அமர்த்தி இருக்கிறது.
சமூக உரையாடல்களைத் தவிர்த்து அவர்களது தனி நபர் திறன்களில் கவனம் செலுத்தி ஆட்சேர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. பகுப்பாய்வு, கணிதம், தகவல் செயலாக்கம் ஆகியவற்றில் வலுவான திறன்கள் உள்ளவர்களைக் கண்டறிந்து பணியில் அமர்த்தியதன் மூலம் அந்நிறுவனம் மிகச் சிறந்த முன்னுதாரணமாக இருக்கிறது. ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்களின் பணித்திறன் உற்பத்தித் திறன் அனைவரும் வியக்கும் விதத்தில் இருப்பது கூடுதல் சிறப்பு.
சமூகப் பங்களிப்பும் பெற்றோர்களின் பங்களிப்பும் எந்த வகையில் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அல்லது வளர்ந்தவர்களை மேம்படுத்தும்?
குழந்தைகள் ஒரு நேரத்தில் ஒரு சிந்தனை அல்லது யோசனையை மட்டுமே கையாள முடியும். ஆகையால் உரையாடல்களை மையமாகவும் எளிமையாகவும் இருக்கும் படி கவனத்தில் கொள்ள வேண்டும்.ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் உண்மையிலேயே ஆர்வமுள்ள ஒரு விஷயத்தைப் பற்றி மட்டுமே பேச விரும்பலாம். குழந்தைகள் நம்மை விட புற நிகழ்வுகளை வித்தியாசமாகப் பார்த்து வேறுவிதமாக நடந்துக் கொள்ளக்கூடும். அவர்களின் அந்த நேர கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
சாதாரண ஒலிகள், சுவைகள், தொடுதல்கள், வாசனைகள் மற்றும் காட்சிகளை நாம் கவனிக்காமல் இருக்கலாம். ஆனால், அந்த சூழல் குழந்தைக்கு உடல் ரீதியாக அல்லது மனரீதியான துன்புறுத்தலாக அமையும். அதை எப்பொழுதும் கவனத்தில் கொள்ள வேண்டும். குழந்தைகள் அதீதமாக கோபப்படும் போதோ அல்லது செய்கைகளுக்கு எதிர்வினையாற்றும் போதோ நிதானத்தை கைக்கொள்ள வேண்டும். நாம் விரும்பியபடி குழந்தைகள் பதில் அளிக்காமல் இருக்கலாம்.
அவர்களுக்கு உணர்ச்சிகளைக் கையாள கடினமானதாக இருக்கக்கூடும். அந்தப் புரிதலோடு குழந்தைகளை அணுக வேண்டும். ஆட்டிசம் குறைபாடு உடைய குழந்தைகள் நேர்மறை எண்ணங்களுக்கு சிறந்த முறையில் பதிலளிக்கின்றனர். மன இறுக்கம் கொண்ட குழந்தை அடிப்படையில் எல்லா குழந்தைகளையும் போல் ஒரு குழந்தை. அறியப்படாத சாத்தியக்கூறுகளுடன் வளர்ந்து வரும் குழந்தை அந்த குழந்தையால் என்ன செய்ய முடியும் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டாம். குறைபாடுகளின் மூலம் நம் குழந்தைகளை குறைத்து நாமே மதிப்பிட வேண்டாம்.
தொகுப்பு: இரா. சசிகலாதேவி
