×

ஆப்பிளின் பயன்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட டாக்டரிடம் செல்ல தேவையிருக்காது என்பது நாம் அறிந்ததே. சாப்பிட விருப்பம் இருந்தும் வேலை பளு காரணமாக ஆப்பிளாக, சாப்பிட முடியாவிட்டாலும் ஜூஸாக எடுத்துக் கொள்ள உடல் ஆரோக்கியம் மேம்படும். வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான நலம் தரும் பழம் என்றால் அது ஆப்பிள்தான். ஆப்பிளில் அதிகளவு பொட்டாசியம், பாஸ்பரஸ் சத்துக்கள் வைட்டமின் சி, மற்றும் பல்வேறு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. குறைந்த அளவில் சோடியமும் உண்டு. சிலர் ஆப்பிளை தோலை எடுத்துவிட்டு சாப்பிடுவர், சதைப்பகுதியை விட தோலிலும் அதிக அளவு வைட்டமின் சத்து உள்ளது.

ஆப்பிளின் முக்கிய நன்மைகள்

இதய ஆரோக்கியம்: ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து (பெக்டின்) மற்றும் பாலிபினால்கள் கொழுப்பைக் குறைத்து, இதய நோய்களைத் தடுக்க உதவுகின்றன. இதயத்தை பாதுகாக்க ஆப்பிளுடன் தேன் கலந்து உண்பது சிறந்த பலனைத் தரும்.ஆப்பிளை பச்சையாக அப்படியே சாப்பிடுவது மலச்சிக்கலை தவிர்க்கும். வேக வைத்த ஆப்பிள் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும். ஆப்பிளின் சதைப் பகுதியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, தொடர் தலைவலியை போக்கும்.தூக்கத்தில் நடக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு தினமும் 2 ஆப்பிள்களை துண்டுகளாக்கி இரவில் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் அந்த தண்ணீருடன் சேர்த்து அரைத்து, பால் கலந்து கொடுத்து வர விரைவில் குணமாகும்.

ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் நல்ல குடல் பாக்டீரியாக்களை ஊக்குவிக்கிறது. இதில் அதிக நார்ச்சத்து மற்றும் தண்ணீர் உள்ளதால், வயிறு நிறைந்த உணர்வைத் தந்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.நீரிழிவு நோய் தடுப்பு: தினமும் ஆப்பிள் சாப்பிடுவது டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

புற்றுநோய் தடுப்பு: ஆப்பிளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நுரையீரல், மார்பகம் மற்றும் செரிமானப் பாதை புற்றுநோய்களைத் தடுக்க உதவக்கூடும்.

மூளை ஆரோக்கியம்: ஆப்பிளில் உள்ள குவெர்செடின் (Quercetin) மூளை செல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது. ஆஸ்துமா கட்டுப்பாடு: ஆப்பிள் தோலில் உள்ள சத்துக்கள் ஆஸ்துமா தொடர்பான வீக்கத்தைக் குறைக்க உதவும். ஆப்பிள் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு ஆப்பிள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

தொகுப்பு: மகாலட்சுமி சுப்ரமணியன்

Tags : Doctor's Day ,
× RELATED மனச்சிதைவு நோயின் பரவலும் உளவியல் சிகிச்சை முறைகளும்