நன்றி குங்குமம் டாக்டர்
வேலிகளில், விவசாய நிலங்களில் கரிசலாங்கண்ணி தானாகவே முளைத்து காணப்படும் தாவரமாகும். இதில் இரண்டு வகையுள்ளன. ஒன்று வெள்ளைப் பூக்களுடன் காணப்படும் வெள்ளை கரிசலாங்கண்ணி. மற்றது மஞ்சள் நிறப்பூக்கள் கொண்ட மஞ்சள் கரிசலாங்கண்ணி ஆகும். இரண்டையுமே மருத்துவத்திற்குப் பயன்படுத்துகின்றனர். இதைக் காயகல்ப மூலிகை என்று கூறுவர். ஆனால் ராமலிங்க அடிகளார் இதை ஞான மூலிகை என்று பெயரிட்டுள்ளனர்.
இதை பச்சையாகவோ அல்லது சமைத்தோ அன்றாடம் உண்டு வந்தால் ஆயுள் நீடிக்கும். உடல் பலப்படும். உடலானது தூய்மையடையும். கண்பார்வை சீராக இருக்கும். பித்தம், சளி வெளிப்படும். உடல் கவர்ச்சிகரமாக இருக்கும்.
சித்தமருத்துவம் கூறுவது…
கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், செயலிழந்த சுரப்பிகளுக்குப் புத்துயிரூட்டும் தன்மை கொண்டது. அதனால் நீரிழிவு, இருதய நோய்கள், உடல் பருமன் போன்றவை கூட குணமாகும். அதாவது தீராத நோய்களுக்கு நிச்சய நிவாரணி என்று கூறலாம். என்றும் இளமையோடு வாழ வைக்கும் மூலிகை இது ஒன்றேயாகும்.
குணமாகும் நோய்கள்
நீரிழிவு நோய்க்கு கரிசலாங்கண்ணி நல்ல மருந்தாகும். அஜீரணம், வயிற்று வலி, குடலில் புண், சோகை, உடலிலுள்ள கொழுப்பைக் கரைக்கும். பித்தப்பையில் கற்கள் இருந்தால் அவற்றைக் குணப்படுத்தும். ஈரல் வீக்கமடைந்திருந்தால் குணமாக்கும். மஞ்சள் காமாலை குணமாகும். கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி சமஅளவு எடுத்து அரைத்து பசுமோர் அல்லது பசும் பாலில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் 5 நாட்களுக்குக் குறையாமல் குடித்து வந்தால் குணமாகும்.
அரை தேக்கரண்டி கரிசலாங்கண்ணிச் சாற்றில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குழந்தைக்குக் கொடுத்தால் சளி இருமல் குணமாகும். குழந்தைகளின் உபாதைகளுக்குக் கொடுக்கலாம். இரும்புச்சத்து இருப்பதால் சோகை நோயுண்டாகாது. தமிழ்நாட்டில் நிறையபேர் கரிசலாங்கண்ணிச் சாற்றுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி தலையில் அன்றாடம் பூசி வருகின்றனர். அதனால் முடி உதிர்வு குறைந்து விரைவில் நரைக்காது. முடி செழித்து வளரும்.
மன நோய்களுக்கு…
கரிசலங்கண்ணிச்சாறு 500 மில்லி அல்லது கிடைக்கும் அளவு எடுத்து அதில் பாதி அளவு நல்லெண்ணெய் கலந்து அடுப்பிலிட்டுக் காய்ச்சவும். சாறு பொங்கி, சடசடப்பு அடங்கும் சமயம் கீழே இறக்கி ஆறவிட்டு பாட்டிலில் அடைக்கவும்.வாரத்திற்கு 2 முறைகள் இந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்து வர பெண்களுக்கு ஏற்படும் ஹிஸ்டீரியா போன்ற மன நோய்களைக் கூட குணமாக்கும்.
