×

மருத்துவர்கள் மற்றும் ஐடி பணியாளர்களை பாதிக்கும்

நன்றி குங்குமம் டாக்டர்

பர்ன்அவுட் சிண்ட்ரோம்!

சமீபகாலமாக இந்தியாவில், குறிப்பாக மருத்துவர்கள் மற்றும் ஐ.டி பணியாளர்களிடையே ஏற்படும் பர்ன்அவுட் சிண்ட்ரோம்(Burnout Syndrome) எனப்படும் தீவிரப் பணிச்சோர்வு மற்றும் மன அழுத்தம் ஒரு முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

பணியிடத்தில் ஏற்படும் தொடர் மன அழுத்தத்தை முறையாகக் கையாளத் தவறுவதே இதற்கு முக்கியக் காரணம் என உலக சுகாதார நிறுவனம் (WHO) சுட்டிக்காட்டியிருக்கிறது. இது வெறும் சாதாரண உடல் சோர்வு மட்டுமல்ல; நமது உடல், மனம் மற்றும் ஹார்மோன்களைப் பாதிக்கும் தொடர்ச்சியான மன அழுத்தப் பிரச்னையாகும். இப்பிரச்னைக்கான காரணம் என்ன.. அதற்கான தீர்வு என்ன என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மனநல மருத்துவர் விவியன் கபில்.

மருத்துவர்களும் ஐ.டி பணியாளர்களும் அதிக எதிர்பார்ப்புகள், வேலைப்பளு, காலக்கெடு(Deadlines) மற்றும் அதிகப் பொறுப்புகளுடன் தொடர்ந்து நீண்டநேரம் பணியாற்றுகின்றனர். இதனால், கோவிட் தொற்றுக்குப் பிறகு, இவர்களில் பலர் தங்களது பணிக்காலத்தில் ஏதேனும் ஒரு கட்டத்தில் இந்தத் தீவிர சோர்வால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மருத்துவர்கள், நோயாளிகளின் வாழ்வா சாவா என்ற நெருக்கடியான சூழல்களையும், உணர்வுப்பூர்வமான அழுத்தங்களையும் அடிக்கடி சந்திக்கின்றனர். அதேசமயம், ஐ.டி பணியாளர்கள் தொடர்ந்து கணினித் திரையைப் பார்ப்பது, மூளைக்கு அதிக வேலை கொடுப்பது, வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்குமான இடைவெளி இல்லாமை போன்ற பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். நாளடைவில் இதுவே அவர்களின் உடல் மற்றும் மன ஆற்றலை முழுமையாக உறிஞ்சிவிடுகிறது.

இந்த நாள்பட்ட மன அழுத்தம் காரணமாகத் தொடர் சோர்வு, தலைவலி, தூக்கமின்மை, செரிமானப் பிரச்னைகள், உடல் வலி மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல் ஆகியவை ஏற்படுகின்றன. இதனால், இவர்கள் எந்நேரமும் பதற்ற நிலையிலேயே இருப்பதால் உடலின் இயல்பான தாங்கும் திறன் குறைகிறது. இதனை ஆரம்பத்திலேயே சரிசெய்யாவிட்டால், உயர் ரத்த அழுத்தம், இதயநோய்கள் மற்றும் பிற தொற்றா நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

உளவியல் ரீதியான பாதிப்புகள்

பர்ன்அவுட் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பதற்றம், எரிச்சல், மனச்சோர்வு, உணர்ச்சியற்ற தன்மை, கவனச்சிதறல் மற்றும் மறதி ஆகியவை ஏற்படலாம். முன்பு எளிதாகச் செய்த வேலைகள் கூட இப்போது கடினமாகத் தோன்றும். முடிவெடுக்கும் திறன் மற்றும் வேலையில் உள்ள ஆர்வம் குறைந்து, அவர்களின் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனும்
படைப்பாற்றலும் பாதிக்கப்படும்.

ஹார்மோன் மாற்றங்கள்

தொடர் மன அழுத்தம் காரணமாக உடலில் கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோன் அதிகமாகச் சுரக்கிறது. இது உடலின் இயல்பான வளர்சிதை மாற்றம், நோய் எதிர்ப்புச் சக்தி, தைராய்டு மற்றும் இனப்பெருக்க ஹார்மோன்களைப் பாதிக்கிறது. இதனால் தூக்கமின்மை, சோர்வு, மனநிலை மாற்றம், மாதவிடாய்க் கோளாறுகள் மற்றும் பாலியல் ஈடுபாடு குறைதல் ஆகியவை ஏற்படுகின்றன.

தீர்வுகளும் தடுப்பு முறைகளும்

இதற்குத் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் என இரு தரப்பிலும் தீர்வுகள் தேவை.

தனிநபர் அளவில்…

முறையான அன்றாடப் பழக்கவழக்கங்கள் கைகொடுக்கும். தியானம், மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி, யோகா, நடைப்பயிற்சி மற்றும் போதுமான தூக்கம் ஆகியவை மன அழுத்தத்தைக் கணிசமாகக் குறைக்கும். மனநிலை, தூக்கம் அல்லது உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட அலட்சியம் செய்யக் கூடாது. அறிகுறிகள் தெரிந்தவுடன் மருத்துவ ஆலோசனை பெறுவது பெரும் சிக்கல்கள் வராமல் தடுக்கும்.

நிறுவனங்களின் பங்கு

தனிப்பட்ட முயற்சிகள் மட்டும் போதாது. நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் மனநலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சரியான பணிச்சுமை, யதார்த்தமான எதிர்பார்ப்புகள், நெகிழ்வான வேலை நேரம் மற்றும் சரியான வழிகாட்டுதல் ஆகியவை அவசியம். மனநலம் குறித்துப் பணியிடத்தில் வெளிப்படையாகப் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும். பணியாளர்களின் நல்வாழ்வில் அக்கறை காட்டும் நிறுவனங்களில்தான் சிறப்பான உற்பத்தித்திறனும் ஆரோக்கியமான பணிச்சூழலும் நிலைத்திருக்கும்.

சுருக்கமாகச் சொன்னால், பர்ன்அவுட் என்பது வெறும் வேலைப்பளுவால் ஏற்படும் சோர்வு அல்ல; இது ஒட்டுமொத்த உடல் மற்றும் மன நலனைப் பாதிக்கும் முக்கியப் பிரச்னையாகும்.
வேகமாக வளர்ந்து வரும் மருத்துவம் மற்றும் ஐ.டி துறைகளில் மனநலக் கொள்கைகளை உறுதியாகப் பின்பற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம். தனிமனித முயற்சியோடு, நிறுவனங்களின் ஆதரவும் இணையும்போது மட்டுமே ஆரோக்கியமான பணிச்சூழலை உருவாக்க முடியும்.

தொகுப்பு: ஸ்ரீ தேவி குமரேசன்

Tags : Kungumam ,India ,
× RELATED மனச்சிதைவு நோயின் பரவலும் உளவியல் சிகிச்சை முறைகளும்