புதுடெல்லி: எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் நீதித்துறை ஊழல் மற்றும் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் பற்றிய தகவல்கள் சேர்க்கப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, என்.சி.இ.ஆர்.டி நேற்று நிபந்தனையற்ற பொதுமன்னிப்பை கேட்டு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பான வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் பிறப்பித்த உத்தரவில், ‘‘யாரிடமும் ஒப்புதல் பெறப்படாமல் பாடப்பிரிவு வெளியாகி உள்ளது.
மாணவர்களுக்கு இந்திய நீதித்துறையின் பிம்பத்தை தவறாக சித்தரிப்பதற்காக வேண்டுமென்றே உண்மைகளை திரித்து தவறாக புத்தகத்தில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளனர் . எனவே, இந்த பாடத்தை எழுதியவர்கள் மாணவர்களுக்கான, பாடத்திட்டத்தைத் தயாரிப்பதற்காகவோ அல்லது அடுத்த தலைமுறைக்கான பாடப்புத்தகத்தை இறுதி செய்வதற்கோ எந்த வகையிலும் தகுதியானவர்கள் கிடையாது. குறிப்பாக மேற்கண்ட சமூக அறிவியல் பாடப்புத்தகம் சிறப்பு குழு மூலம் தயாரிக்கப்பட வேண்டும். அந்த பாடதிட்டத்துக்கு ஒப்புதல் வழங்க முன்னாள் மூத்த நீதிபதி, சிறந்த கல்வியாளர், மூத்த வழக்கறிஞர் ஆகிய மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். ஒருவாரத்தில் ஒன்றிய அரசு இந்த குழுவை அமைக்க வேண்டும் .என்.சி.இ.ஆர்.டியின் கீழ் இயங்கும் தேசிய பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் கற்றல் குழுவை கலைக்க வேண்டும். இதில் நீதித்துறையை சமூக ஊடகங்களில் அவமதித்தவர் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
