- தமிழ்
- தமிழ்நாடு
- நவோதயா
- தமிழ்நாடு அரசு
- உச்ச நீதிமன்றம்
- புது தில்லி
- குமாரி மகா சபா
- சென்னை உயர் நீதிமன்றம்
- ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
புதுடெல்லி: தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட கோரி குமரி மகா சபா என்ற அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நவோதயா பள்ளிகளை தமிழ்நாடு அரசு திறப்பதற்கு அனுமதி வழங்கி 2017 செப்டம்பர் 11ம் தேதி உத்தரவிட்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதையடுத்து முன்னதாக வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசின் திட்டங்கள் நாங்கள் ஏற்க வேண்டிய அவசியம் கிடையாது என்று தமிழ்நாடு அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பில் பி.வில்சன் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,\\” ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கைக்கு எதிரானது ஆகும். குறிப்பாக இந்தி, ஆங்கிலம் மற்றும் மாநில மொழி ஆகிய மூன்று மொழிகளை உள்ளடக்கிய மும்மொழிக் கொள்கையின் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 38 உறைவிட வசதியுடன் அரசின் மாதிரி பள்ளிகள் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இவற்றில் அனைத்து நிலையில் உள்ள மக்களும் எளிதாக அணுகும் வகையில் தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. அதிநவீன வசதிகளின் கூடிய இந்த மாதிரி பள்ளிகளில் பயின்ற 1,340 மாணவர்கள் கடந்த 2024-2025 கல்வியண்டில் மட்டும் அகில இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். பல மாணவர்கள் முழுமையாக அரசின் ஸ்காலர்ஷிப் பெற்று சர்வதேச அளவில் கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர்.
இது தமிழ்நாட்டின் மேம்படுத்தப்பட்ட கல்வியின் தரத்தை எடுத்துக்காட்டுகிறது. ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் இல்லாமலேயே தமிழ்நாட்டின் கல்வி சிறப்பாக உள்ளது. தமிழ்நாடு அரசை பொருத்தவரைக்கும் சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்க உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் அரசினுடைய மாதிரி பள்ளிகள் செயல்பாட்டில் இருக்கும் போது புதியதாக அதன் நகல் போல் இருக்கும் நவோதயா வித்யாலயா பள்ளிகளை தவிர்த்து விட்டு, மாநில சுயாட்சியை பாதுகாக்க தற்போதுள்ள உள்கட்டமைப்பு மூலம் தேசிய கல்வி நோக்கங்களை அடையவும், மாநிலத்தில் தற்போது செயல்பட்டு வரும் மாதிரி பள்ளிகளுக்கும் ஒன்றிய அரசு நிதி உதவியை விரிவாக்கம் செய்யவும் வேண்டும்.
குறிப்பாக ஏற்கனவே சமகிரக சிக்ஷா திட்டத்தின் கீழ் மாநில அரசுக்கு கல்விக்காக வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. எனவே தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட வேண்டிய கல்வி நிதி ரூ.3548.22 கோடியை வழங்க வேண்டும். ஒன்றிய அரசு தனது பங்கு கல்வி நிதியை விடுவிக்காததால் மாநிலத்தில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு, பராமரிப்பு மாணவர்கள் நலத்திட்டங்கள், ஆசிரியர்களுக்கான ஊதியம் மற்றும் கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தொய்வு ஏற்படுகிறது. எனவே இதனை போக்கும் வகையில் ஒன்றிய அரசு கல்வி நிதியை விரைவாக விடுவிக்க வேண்டும்.
இதில் கூடுதலாக நிறுவனங்களை கொண்டு வருவதற்கு பதிலாக ஒன்றிய அரசு முன்னதாக ஏற்றுள்ள தனது கடமைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்றாமல் கூடுதலாக நிறுவனங்களை திறப்பது என்பது நிதி ரீதியில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும். எனவே ஒன்றிய அரசு ஏற்கனவே மாநிலத்திடம் உறுதியளித்த விஷயங்களை நிறைவேற்றி தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு நேற்று பட்டியலில் இருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
