×

களியனூர் ஊராட்சியில் குடிநீர் விநியோகம் சீரானது

பள்ளிபாளையம், மார்ச் 12: களியனூர் ஊராட்சியில் திருட்டு போன மின் மோட்டாரின் ஒயர்கள் புதியதாக பொறுத்தப்பட்டதை அடுத்து, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. பள்ளிபாளையம் ஒன்றியம், களியனூர் ஊராட்சியில் உள்ள அண்ணாநகர், பெருமாள் கோயில் வீதி, ஊர்கிணறு வீதி ஆகிய பகுதிக்கு குடிநீர் வழங்கும் 2 மோட்டார்களின் ஒயர்களை, மர்ம நபர்கள் கடந்த சனிக்கிழமை இரவு துண்டித்து திருடிச்சென்றனர். இதனால் அரசு உயர்நிலைப்பள்ளி, ஆவத்திபாளையம் காவிரி கரையில் இருந்த 2 மின் மோட்டார்களையும் இயக்க முடியவில்லை. காவிரி ஆற்றில் தண்ணீரின் அளவு குறைந்ததால், ஊராட்சிக்கு தண்ணீர் வழங்கும் பணி பாதிக்கப்பட்டது. காவிரி ஆற்று நீரும் கிடைக்காமல், ஆழ்துளை கிணற்று நீரும் கிடைக்காமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

இதனையடுத்து, சேவை நிறுவனங்கள் மூலம், கடந்த 2 நாட்களாக பொதுமக்களுக்கு லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. மின் இணைப்பை சீர்படுத்தும் நடவடிக்கையில் ஊராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட்டது. மின்சார ஒயர்கள் புதியதாக கொள்முதல் செய்யப்பட்டு மாற்றப்பட்டது. காவிரி கரையில் ஆழ்துளை கிணற்று பகுதிகளில் முட்கள் புதர்கள் அகற்றப்பட்டு, பொக்லைன் இயந்திரம் மூலம் சமப்படுத்தப்பட்டது. கிரேன் மூலம் ஆழ்துளை கிணற்றுக்குள் இருந்த மோட்டார் வெளியில் எடுக்கப்பட்டு, அதில் புதிய ஒயர் பொருத்தப்பட்டு மேல்நிலைத்தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டது. 2 நாட்களுக்கு பிறகு நேற்று குழாய்கள் மூலம் தட்டுப்பாடின்றி தண்ணீர் வழங்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

Tags : Kaliyanur Panchayat ,Pallipalayam ,Annanagar ,Perumal Koil Road ,Urkinaru Road ,Pallipalayam Union ,Kaliyanur Panchayat… ,
× RELATED துணை ராணுவத்தினர் கொடி அணி வகுப்பு