×

புதுச்சேரியில் நள்ளிரவு கேட் ஏறி குதித்து கவர்னர் இல்லத்திற்குள் புகுந்து குளித்து மட்டையான மாணவர்: அதிகாரிகள், போலீசார் அதிர்ச்சி

புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர் இல்லத்திற்குள் கேட் ஏறி குதித்து, அறையில் படுத்து தூங்கிய போதை ஆசாமி பிடிபட்டுள்ளார். புதுச்சேரி பாரதி பூங்கா அருகே செயின்ட் மார்ட்டின் வீதியில் கவர்னர் மாளிகை (லோக் நிவாஸ்) உள்ளது. 250 ஆண்டு பழமையான இக்கட்டிடத்தில் கவர்னர் மாளிகை செயல்பட்டதால், பாதுகாப்பு கருதி, குருசுக்குப்பம் பழைய சாராய ஆலை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலாச்சார மைய கட்டிடத்துக்கு கவர்னரின் இல்லம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. கவர்னர் கைலாஷ்நாதன் அங்கு தான் தங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு போதையில் மர்ம நபர் ஒருவர், கவர்னர் தங்கியிருக்கும் இல்லத்திற்குள் கேட் ஏறி குதித்து உள்ளே புகுந்துள்ளார். பின்னர் அவர், விருந்தினர்கள் தங்கும் அறையில் படுத்து தூங்கியுள்ளார். நேற்று அதிகாலை கவர்னரின் மகன் மற்றும் அதிகாரிகள் அவர்களது அறையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது மற்றொரு அறை கதவு திறந்து இருந்ததையும் மர்மநபர் படுத்து இருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். யாருடா நீ… இங்கு எப்படி வந்தாய், இங்கு என்ன செய்கிறாய்? என கேட்டு விசாரித்துள்ளனர். அதற்கு அவர், போதையில் திருதிருவென முழித்துள்ளார்.

கவர்னர் மாளிகைக்குள் போதை மாணவர் அத்துமீறி புகுந்த சம்பவம் அறித்து, டிஐஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பதறியடித்து அங்கு விரைந்து வந்தனர். மாணவரை முறைப்படி விசாரித்து, முத்தியால்பேட்டை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஹ்ரிதிக் ஜா என்பதும், பெங்களூருவில் தனியார் கல்லூரியில் பொறியியல் படிக்கும் மாணவர் என்பதும், உடன் படிக்கும் டெல்லியை சேர்ந்த மாணவருடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்ததும், இருவரும் மது குடித்ததும் போதையில் என்ன செய்வது என தெரியாமல் ஓட்டல் அறை என நினைத்து கவர்னர் இல்லத்திற்குள் அத்துமீறி கேட் ஏறி குதித்து, பாத்ரூமில் குளித்து, அறையில் படுத்து தூங்கியுள்ளார். கவர்னர் மாளிகைக்கு வந்திருந்த விருந்தாளிகளில் ஒருவர் என பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கருதியதாக தெரிகிறது.

மேற்கண்ட மாணவர் மீது அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குருசுகுப்பத்தில் கடற்கரை ஓரம் புதிதாக கட்டப்பட்டுள்ள கலாச்சார மையத்தில் கவர்னர் மாளிகை செயல்பட்டால் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கும் என ஏற்கனவே குற்றச்சாட்டு கூறப்பட்ட நிலையில், தற்போது இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதுகாப்பு வளையம் நிறைந்த கவர்னர் மாளிகைக்குள் போதை மாணவர் அத்துமீறி புகுந்து அறையில் படுத்து தூங்கிய சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Puducherry ,Governor ,Lok Niwas ,St. Martin's Road ,Bharathi Park ,
× RELATED சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை; அம்மா...