×

நள்ளிரவில் வீட்டில் தீவிபத்து தம்பதி, குழந்தை உடல் கருகி பலி

சென்னை: கூடுவாஞ்சேரி அடுத்த, பெருமாட்டுநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பாண்டூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் பார்த்திபன்(34), கொத்தனார். இவரது மனைவி சித்ரா(29). இவர்களது மகள் ஜெயஸ்ரீ(3). பார்த்திபன் தினந்தோறும் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்புவார். பார்த்திபன் வேலைக்கு செல்லும்போது தனது மனைவி மற்றும் குழந்தையை கன்னிவாக்கம் ஜே.ஜே.நகரில் குடியிருந்து வரும் தனது அக்கா மகேஸ்வரி(37) வீட்டில் விட்டுவிட்டு செல்வதும், வேலை முடிந்து வந்து இரவு இருவரையும் தனது வீட்டுக்கு அழைத்து செல்வதும் வழக்கம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வேலை முடிந்து திரும்பியபோது, பார்த்திபன் மது அருந்திவிட்டு அக்கா மகேஸ்வரி வீட்டிற்கு வந்துள்ளார். இதனிடையே, மகேஸ்வரியின் 3வது குழந்தையான பவன்குமாருக்கு உடல்நிலை சரியில்லாததால், தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வரும் வரை வீட்டிலேயே இருக்கும்படி கூறிவிட்டு மகேஸ்வரி, அவரது கணவர் ராம்நாத்(45), மகேஸ்வரியின் தந்தை மூர்த்தி(63), தாய் புஷ்பா(56) ஆகியோர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

பின்னர், சிகிச்சை முடிந்து நள்ளிரவு 1 மணியளவில் அனைவரும் வீடு திரும்பினர். அப்போது, மகேஸ்வரி வீட்டில் புகை மூட்டம் எழும்பியதை கண்டு திடுக்கிட்டனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் தீ மளமளவென எரியத் தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்து வந்த மறைமலைநகர் தீயணைப்பு துறையினர் தண்ணீர் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பார்த்திபன், அவரது மனைவி சித்ரா, மகள் ஜெயஸ்ரீ ஆகிய 3 பேரும் உடல் கருகிய நிலையில் இறந்துகிடந்தனர். தகவலறிந்து வந்த கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் நெடுமாறன் மற்றும் போலீசார், 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து தீ விபத்தில் 3 பேர் பலியானது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Chennai ,Parthiban ,Pandur village ,Perumattunallur panchayat ,Kuduvancheri ,Chitra ,Jayashree ,
× RELATED சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை; அம்மா...