×

எழும்பூர் தொகுதி புல்லாபுரம் பகுதியில் 204 பேருக்கு வீட்டுமனை பட்டா: அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்

சென்னை: எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புல்லாபுரம் பகுதியை சேர்ந்த 204 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று வழங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்ற உன்னத நோக்கத்துடன் பல்வேறு நலத்திட்ட பணிகளை தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, சென்னை மாவட்டத்தில் நீண்ட காலமாக நத்தம் வகைப்பாடு நிலங்கள் மற்றும் ஆட்சேபனை அற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் மக்களுக்கு கணினி பட்டா வழங்குவதில் இருந்த சிக்கல்களை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று கணினி பட்டா வழங்குவதற்கு உண்டான அரசாணைகள் பெறப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நேற்று சென்னை மாவட்டம் எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் விழா, குயப்பேட்டை அறிஞர் அண்ணா மாளிகையில் நேற்று நடந்தது. விழாவில் அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு 204 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். இதன்மூலம் பத்திரப்பதிவு செய்வதற்கும், கட்டிடம் கட்டுவதற்கும் இருந்த தடை விலகியுள்ளது.

மேலும், புல்லாபுரம் பகுதி மக்களின் நீண்ட கால பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஐந்து ஆண்டுகளில் சுமார் 23 லட்சம் பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில், மேயர் பிரியா, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் சு.கீதா, மாமன்ற உறுப்பினர்கள் சோ.வேலு, பரிதி இளம் சுருதி மற்றும் அரசு அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,P.K. Sekarbabu ,Pullapuram ,Egmore ,Chennai ,Chief Minister ,M.K. Stalin ,Tamil Nadu ,
× RELATED சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை; அம்மா...