×

குட்டையை குழப்பும் காங்கிரஸ் மாஜி மாநில தலைவர்

கேரளாவில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. இந்த முடிவை காங்கிரஸ் கூட்டணி சற்றும் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து 10 வருடங்கள் எதிர்க்கட்சியாக இருந்தது, கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இம்முறை மீண்டும் ஆட்சியைப் பிடித்தே தீருவது என்ற எண்ணத்தில் பல மாதங்களுக்கு முன்பே தேர்தல் பணிகளை காங்கிரஸ் தலைவர்கள் தொடங்கி விட்டனர். மேலும் தலைவர்களுக்கு கட்சியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன்படி யாரும் சொந்தமாக தங்களை வேட்பாளராக அறிவிக்கக் கூடாது. இம்முறை எம்பிக்கள் யாருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் கண்ணூர் தொகுதியில் தான் போட்டியிடப் போவதாக முன்னாள் மாநில தலைவரும், கண்ணூர் எம்பியுமான கே.சுதாகரன் அறிவித்தது காங்கிரஸ் கட்சியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்ணூர் தொகுதியில் தன்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும், எனவே கண்டிப்பாக தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் அவர் கூறினார். சுதாகரன் தன்னிச்சையாக தன்னுடைய பெயரை அறிவித்தது கட்சியில் மூத்த தலைவர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் கூறியதாவது: எம்பிக்களுக்கு இம்முறை வாய்ப்பு கிடையாது என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும். இந்த நிபந்தனை தளர்த்தப்பட மாட்டாது. யாராக இருந்தாலும் தங்களை சுயமாக வேட்பாளராக அறிவிக்க கூடாது. எனக்கு கூட இம்முறை போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா என்பதை என்னால் கூற முடியாது. அது குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

* புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்திய மார்க்சிஸ்ட்
புதுச்சேரியில் தற்போது இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெற்றுள்ளது. புதுச்சேரியை பொறுத்தவரை கடந்த தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணியில் சீட் தராததால், முத்தியால்பேட்டை தொகுதியில் வேட்பாளர் சரவணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தனித்து களமிறங்கி 321 ஓட்டுகளை மட்டுமே பெற்றார். அதேபோல் கேரள மாநிலத்தின் பக்கத்தில் உள்ள புதுச்சேரி தொகுதியான மாகேவில் நேரடியாக போட்டியிடாமல், மார்க்சிஸ்ட் ஆதரவு பெற்ற சுயேச்சைக்கு ஆதரவு தந்தனர். இந்நிலையில் திருபுவனை, லாஸ்பேட்டை ஆகிய தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளதாக தகவல்
வெளியானது.

சிபிஎம் சார்பில் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘புதுச்சேரியை காக்க மாற்றத்தை உருவாக்க வாக்களிப்பீர் அரிவாள், சுத்தியல் சின்னத்துக்கு… திருபுவனை லாஸ்பேட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடுகிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் பெருமாளிடம் கேட்டபோது, ‘‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிடவில்லை. எங்களுடைய விருப்பத்தையும், போட்டியிட விரும்பும் தொகுதியையும் கூட்டணி கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளோம். எங்களது சின்னம் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்ற அடிப்படையில் கட்சி சார்பில் அந்த பதிவை வெளியிட்டு இருக்கிறோம். மற்றபடி வேறொன்றும் இல்லை’’ என்றார். அதே நேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ரெட்டியார்பாளையம், உழவர்கரை, தட்டாஞ்சாவடி உள்ளிட்ட 4 தொகுதிகளை விருப்ப தொகுதியாக குறிப்பிட்டு ஒதுக்குமாறு கூட்டணி தலைமையிடம் வலியுறுத்தி உள்ளனர்.

* கோ பேக் ஞானேஷ்குமார் விரட்டியடிக்கும் மேற்குவங்கம்
விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலங்களில் ஆய்வு நடத்தி முடித்து விட்ட தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு மேற்குவங்கம் பெரிய தலைவலியாக உள்ளது. அங்கு நேற்று அவர் ஆய்வு நடத்தி முடித்து விட்டார். இருப்பினும் அவர் திரும்பும் இடம் எல்லாம் எதிர்ப்பு குரல் ஒலித்தது. ஞானேஷ்குமார் எங்கு சென்றாலும் கோ பேக் கோஷங்கள் எழுந்து கொண்டே இருந்தன. எஸ்ஐஆர் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கட்சியும் தனித்தனியாக ஞானேஷ்குமாரை குறிவைத்தன.

ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி, ஆய்வு முடிந்து திரும்பி செல்லும் போது வரை கொல்கத்தா ஏர்போர்ட்டில் எதிர்ப்பு கோஷங்களும், கருப்பு கொடியும் காட்டப்பட்டன. திங்கட்கிழமை காளிகாட் கோயிலுக்கு செல்லும் போதும், நேற்று கொல்கத்தா தட்சிணேஸ்வர் கோயிலுக்கு செல்லும் போதும் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தை பார்த்து விட்டு தான் சாமி தரிசனத்திற்கே செல்ல முடிந்தது. அதோடு கோ பேக் ஞானேஷ்குமார் கோஷம் வேறு. வெறுத்துப்போய் விட்டார். இதனால் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் திரும்பிய திசை எல்லாம் மேற்குவங்கம் விரட்டியடித்து விட்டதாக பேச்சு எழுந்துள்ளது.

* 40 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.9 ஆயிரம் ஜாக்பாட்: அசாம் பா.ஜ அரசு தாராளம்
அசாம் சட்டப்பேரவை தேர்தலில் எப்படியாவது ஹாட்ரிக் வெற்றியை பெற்றாக வேண்டும் என்ற நோக்கில் பாஜ முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா செயல்பட்டு வருகிறார். எதிர்க்கட்சியான காங்கிரசை பலவீனப்படுத்தி, அங்கிருந்து பலரை பாஜவுக்கு இழுத்தாலும் தேர்தல் வெற்றியில் அவருக்கு சந்தேகம் எழுந்துவிட்டது. பார்த்தார் முதல்வர் ஹிமந்தா, எப்படியாவது பெண்கள் ஓட்டை பீகார் மாடல் வழியில் தங்கள் பக்கம் இழுக்க அசாமில் அரசு திட்டத்தின் கீழ் 40 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.9,000 ஒரே நேரத்தில் நேற்று டெபாசிட் செய்யப்பட்டது. பீகாரில் 10 ஆயிரம். அசாமில் ரூ.9 ஆயிரம். பெண் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தப்படும் தொகை ஆட்சியின் கருணை அணுகுமுறையின் வெளிப்பாடு என்று முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பெருமைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்.

இந்தத் திட்டம் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்காக வழங்கப்படவில்லை. அதே போல அடிக்கடி வழங்கக்கூடியதும் அல்ல. இருப்பினும் குறிப்பிட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் பெண்களுக்கு மட்டுமே இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். அதே சமயம் அசாமில் பெண்கள் தலைமையிலான குடும்பங்களை வலுப்படுத்துவதற்கான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என்று முதல்வர் அலுவலகம் பெருமைப்பட்டுக்கொண்டது. இந்த திட்டத்தின் பெயர் ஒருனோடை ஆகும். ஒருனோடை என்பது பாஜ தலைமையிலான அசாம் அரசின் முதன்மை வறுமை ஒழிப்புத் திட்டமாகும். இதன் கீழ் ஒரு குடும்பத்திற்கு ஒரு தகுதியான பெண் பயனாளிக்கு மாதம் ரூ.1,250 வழங்கப்படுகிறது. ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரை இந்த திட்டத்தின்கீழ் ரூ.5 ஆயிரமும், அசாமி புத்தாண்டை குறித்து போஹாக் பிஹூ விழாவுக்கு கூடுதலாக ரூ.4 ஆயிரமும் என மொத்தம் 9 ஆயிரம் என வாரி வழங்கியிருக்கிறார் முதல்வர் ஹிமந்தா.

Tags : Congress ,Left alliance ,2021 elections ,Kerala ,Congress alliance ,Congress party ,
× RELATED காஸ் விலை உயர்வை கண்டித்து மகிளா காங்கிரஸ் போராட்டம்