×

எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: வங்கதேசம் முழுவதும் ஸ்தம்பிப்பு: பொதுமக்கள் கடும் அவதி

டாக்கா: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் வங்கதேசத்தில் எரிபொருள் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம் தனது எரிபொருள் தேவையில் 95 சதவீதத்தை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில், ஈரான் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதிகளில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக, சர்வதேச அளவில் விநியோகச் சங்கிலி கடுமையாக உடைந்துள்ளது. இதனால், எரிபொருளை நம்பியிருக்கும் வங்கதேசத்தின் மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறைகள் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளன.

தற்போது நிலவும் சூழலை சமாளிக்க, இன்று முதல் வங்கதேச அரசு அதிகாரப்பூர்வமாக எரிபொருள் ரேஷன் முறையை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, பைக் வைத்திருப்பவர்கள் ஒரு முறைக்கு 2 லிட்டர் மட்டுமே பெட்ரோல் வாங்க முடியும். கார்களுக்கு 10 லிட்டர் என்ற உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேருந்து மற்றும் லாரிகள் போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு மட்டும் 70 முதல் 220 லிட்டர் வரை எரிபொருள் வழங்கப்படுகிறது. எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. ஈகைத் திருநாள் விடுமுறைக்கு முன்னதாகவே அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் உள்ள 5 அரசு உரத் தொழிற்சாலைகளில் 4 தொழிற்சாலைகளின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச பாடத்திட்ட பள்ளிகள் மற்றும் பயிற்சி மையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து அந்நாட்டு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம் தரப்பில் கூறுகையில், ‘தற்போது கையிருப்பில் 14 நாட்களுக்குத் தேவையான டீசலும், 8 முதல் 15 நாட்களுக்குத் தேவையான பெட்ரோல் மற்றும் ஆக்டேனும் உள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானிலும் பெட்ரோல் விலை ஒரே நாளில் 55 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த தெற்காசிய பிராந்தியமும் இந்த எரிபொருள் நெருக்கடியில் சிக்கியுள்ளது.

Tags : Bangladesh ,Dhaka ,Middle East ,India ,Iran ,Strait of Hormuz… ,
× RELATED ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில்...