×

நாடு முழுவதும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி; பிரதமர் பதவி விலக கோரி எதிர்க்கட்சிகள் அமளி

புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் மற்றும் தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவையில் கடந்த காலங்களில் சபாநாயகர் ஓம் பிர்லாவின் செயல்பாடுகள் ஒருதலைப்பட்சமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக புகார் தெரிவித்து வந்தன. குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதற்கு போதிய அனுமதி வழங்கப்படுவதில்லை என்றும், முக்கிய விவாதங்களின் போது பாரபட்சம் காட்டப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, சபாநாயகரை பதவியில் இருந்து நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் ஏற்கனவே நோட்டீஸ் அளித்திருந்த நிலையில், அதன் மீதான முக்கிய கட்டத்தை சபை இன்று எட்டியது.

டெல்லியில் இன்று மக்களவை கூடியதும், சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் முக்கிய அம்சமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் கவுரவ் கோகோய், மணிஷ் திவாரி உள்ளிட்ட 118 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட இந்த தீர்மானத்தில், சபாநாயகர் பாரபட்சமாக நடந்துகொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று மதியம் 12 மணியளவில் தொடங்க இருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக சபையில் அடுத்தடுத்து ஒத்திவைப்புகள் ஏற்பட்டன. கேள்வி நேரம் முடிந்த பின்னர், காங்கிரஸ் எம்.பி.க்கள் முகமது ஜாவேத், கே.சுரேஷ் மற்றும் மல்லு ரவி ஆகியோர் இந்த தீர்மானத்தை முறைப்படி தாக்கல் செய்கின்றனர்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்த தீர்மானத்திற்கு தனது முழு ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளதால், எதிர்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிவடையும் என்கின்றனர். முன்னதாக மேற்கு ஆசியாவில் நிலவி வரும் ஈரான் – இஸ்ரேல் போர் குறித்து உடனடியாக விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். மறுபுறம், மாநிலங்களவையில் தேர்தல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாடினார். இதனை ‘மோசடி’ என்று அவர் விமர்சித்ததால் ஆளும் பாஜக உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன் காரணமாக எதிர்க்கட்சியினர் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். சபையின் மையப்பகுதிக்குச் சென்று எம்பிக்கள் முழக்கமிட்டதாலும், பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தியதாலும் மக்களவை இன்று பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று கோஷமிட்டன. மற்றொரு முக்கிய நிகழ்வாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகள் அணிதிரண்டுள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில், காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் இணைந்து தலைமை தேர்தல் ஆணையர் மீது பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளன. குறிப்பாக, மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இது வாக்கு திருட்டுக்கு வழிவகுத்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஒருதலைப்பட்சமாக இருப்பதாக தெரிவித்துள்ள இந்தியா கூட்டணி தலைவர்கள், ‘தேர்தல் ஆணையரின் பாரபட்சமான போக்கை அனுமதிக்க முடியாது’ என்று தெரிவித்துள்ளனர். இந்த பதவி நீக்க தீர்மானத்திற்கான நோட்டீஸ், மாநிலங்களவையில் 50 எம்.பி.க்களின் கையெழுத்துடனும் அல்லது மக்களவையில் 100 எம்.பி.க்களின் கையெழுத்துடனும் நாளைக்குள் (புதன்கிழமை) தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சபாநாயகர் மற்றும் தேர்தல் ஆணையர் என இரு முக்கிய பதவிகளில் உள்ளவர்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒரே நேரத்தில் களம் இறங்கியுள்ளதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

Tags : New Delhi ,Speaker of the People ,Assembly ,Chief Election Commissioner ,Speaker ,Om Birla ,Lok Sabha ,
× RELATED எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக விமான கட்டணங்கள் உயர்வு..!!