திருப்பூர், மார்ச்10: தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடங்கப்பட உள்ளது.
இதற்கான அட்டவணை ஏற்கனவே தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறையால் வெளியிடப்பட்டது. அதன்படி நாளை தொடங்க உள்ள 10ம் வகுப்பு பொதுத் தேர்வினை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 345 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 14,375 பேரும், மாணவிகள் 15,069 பேர் தனித்தேர்வர்கள் 1,237 பேர் என 30,681 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
109 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தேர்வு அறை கண்காணிப்பாளர்கள்,தேர்வு மைய கண்காணிப்பாளர்கள்,பறக்கும் படை அதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் என சுமார் 1,700 க்கும் அதிகமான ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளைய தினம் தொடங்கி ஏப்ரல் 2ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற இருப்பதாக பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
