சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு திமுக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட 6 பேரும் புதிய எம்பிக்களாக விரைவில் பதவியேற்பார்கள். தமிழகம் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 37 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கான தேர்தல் தேதி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 5ம் தேதியுடன் முடிவடைந்தது. வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 9ம் தேதி கடைசி நாளாகும். மார்ச் 16ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் திமுகவை சேர்ந்த என்.ஆர்.இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி.செல்வராசு மற்றும் தம்பிதுரை (அதிமுக), ஜி.கே.வாசன் (தமாகா) ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் சென்னை, தலைமை செயலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் உள்ள எம்எல்ஏக்களின் அடிப்படையில் திமுக 4 எம்பிக்களையும், அதிமுக 2 எம்பிக்களையும் தேர்வு செய்ய முடியும்.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்ய இறுதி நாளாக கடந்த 5ம் தேதி, முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து, திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு அறிவிக்கப்பட்ட ஒரு இடத்தில் கிறிஸ்டோபர் திலக், திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு வழங்கப்பட்ட ஒரு இடத்தில், அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் மனு தாக்கல் செய்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மு.தம்பிதுரை, அதிமுக கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இடத்தில் பாமக(அ) சார்பில் அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன்படி திமுக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்களுக்கு தலா 10 எம்எல்ஏக்கள் முன்மொழிந்துள்ளனர். அதேபோன்று, சுயேச்சை வேட்பாளர்களாக மேட்டூரை சேர்ந்த கு.பத்மராஜன், திருச்சியை சேர்ந்த கே.பி.எம்.ராஜா, அம்பத்தூரை சேர்ந்த டி.கே.மேஷாக் கிருபாகரன், அக்னீ ஆழ்வார், ரெ.கந்தசாமி, பா.இசக்கிமுத்து, பாமக நிறுவனர் ராமதாசின் உதவியாளர் சுவாமிநாதன் ஆகிய 7 பேர் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
கடந்த 6ம் தேதி (வெள்ளி) காலை 11 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தி முன்னிலையில் வேட்புமனு பரிசீலனை நடந்தது. அப்போது திமுக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளாக காங்கிரஸ், தேமுதிக, பாமக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்த 7 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இவர்களுக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழியாததால் தள்ளுபடி செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
7 மற்றும் 8ம் தேதி (சனி, ஞாயிறு) விடுமுறையாகும். 9ம் தேதி (நேற்று) மாலை 3 மணிக்குள் வேட்புமனு மக்கள் வாபஸ் வாங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அரசியல் கட்சிகள் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் வாபஸ் வாங்கவில்லை. இதையடுத்து நேற்று மாலை 3 மணிக்கு அரசியல் கட்சி சார்பில் போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி வெற்றிபெற்றதாக தமிழக தேர்தல் அதிகாரி சாந்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மு.தம்பிதுரை (அதிமுக), கிறிஸ்டோபர் மாணிக்கம் (காங்கிரஸ்), எல்.கே.சுதீஷ் (தேமுதிக), அன்புமணி (பாமக) ஆகிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் அதற்கான சான்றிதழையும் தேர்தல் அதிகாரியிடம் இருந்து நேற்று பெற்றுக்கொண்டனர்.
வெற்றி பெற்றதற்கான சான்றிதழை திருச்சி சி.சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் (திமுக) ஆகிய 2 திமுக எம்பிக்கள் மட்டும் நேற்று பெறவில்லை. இவர்கள் இன்று பெற்றுக்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. வெற்றிபெற்று சான்றிதழ் பெற்றுக்கொண்ட 4 பேரும் தங்கள் கட்சியின் தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் ஏப்ரல் 2ம் தேதிக்கு பிறகு, நாடாளுமன்றம் கூடும் நாளில் மாநிலங்களவையில் புதிய எம்பிக்களாக தமிழகத்தில் இருந்து வெற்றிபெற்ற 6 பேரும் பதவியேற்றுக்கொள்வார்கள்.
