திருவனந்தபுரம் வந்த நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் பேசும்போது, கேரளாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணத்திட்டம் அமல்படுத்தப்படும் என்றார். இதற்கு கேரளாவில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் கேரள போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
தேர்தல் வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்றுவதில் தவறில்லை. ஆனால் இந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் இரண்டே மாதங்களில் கேரள அரசு போக்குவரத்துக் கழகம் அழிந்துவிடும். கர்நாடகாவில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் என்று ராகுல் காந்தி கூறினார். இப்போது கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகம் கடும் நஷ்டத்திலும், நெருக்கடியிலும் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கேரளாவில் இந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் கர்நாடகாவை விட மோசமான நிலை இங்கு ஏற்படும்.
இப்போதும் கேரள அரசு போக்குவரத்துக் கழகம் லாபத்தில் இயங்கவில்லை. தினசரி ஏற்படும் நஷ்டத்தை குறைத்து செலவை விட சற்று கூடுதல் வருமானம் வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்காக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இலவச பயணத்தை ஏழைகளுக்கோ அல்லது வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கோ கொடுக்க வேண்டும். சொந்தமாக கார் வைத்திருக்கும் பெண்களுக்கோ அல்லது 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கோ இலவச பயணம் அளிப்பதால் எந்த பலனும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
