×

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் மகளிர் தினத்தையொட்டி இறகு பந்து போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசளிப்பு

சென்னை: சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பாக சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கான இறகு பந்து போட்டி நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிக்கும் விழா சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட கலைஞர் ரோகினி, ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி நுண்ணறிவு இயக்குநரக உதவி இயக்குநர் கீதா, பத்திரிகையாளர் ரம்யா கண்ணன், மாதவரம் நீதித்துறை மாஜிஸ்திரேட் தீபா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.

இதில் முதல் பரிசாக ரூ.25 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.15 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரமும் மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அணியினருக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி நுண்ணறிவு இயக்குநரக உதவி இயக்குநர் கீதா பேசுகையில், ‘‘பெண்களுக்கான மன அழுத்தத்தை வெளியில் தெரியாமல் மறைத்துக்கொள்கிறோம். அதனை உடைத்து வெளியே வர வேண்டும்’’ என்றார்.

மாதவரம் மாஜிஸ்திரேட் தீபா பேசுகையில், ‘‘முதலில் பெண்களிடையே இருக்கும் அதிகாரத்தை வெளிக்கொண்டு வர வேண்டும். அப்போது தான் இந்த சமூகம், இயற்கை எல்லாமே புனிதமாகும்’’ என்றார். திரைப்பட கலைஞர் ரோகினி, ‘‘பெண்கள் பல இன்னல்களை தாண்டி வரவேண்டியுள்ளது. ஒரு சமூகம் முன்னேற்றம் அடைகின்றது என்றால் அந்த சமூகம் பெண்களுக்கு என்ன செய்துள்ளது என்பதை பார்க்க வேண்டும் என அம்பேத்கர் கூறுகிறார். அப்படி பார்க்கும் போது நமது சமூகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவான குரல்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

ஒரு வீட்டில் தன்பாலீன ஈர்ப்பு என யார் வந்து சொன்னாலும் அந்த குடும்பத்தினர் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதில் ஆரம்பித்து நம்மை பற்றி சமூகத்தில் இழிவாக கூறினால் அப்படியே போகட்டும் என கடந்து போகாத ஒரு மனதை வளர்த்துக்கொள்ள வேண்டும்’’ என்று கூறினார். மூத்த பத்திரிகையாளர் ரம்யா கண்ணன் பேசுகையில், ‘‘ஊடகத்துறையில் நாம் உள்ளோம். நமக்கான இடத்தை நாம் எப்போது விட்டுக்கொடுக்க கூடாது. நாம் வகிக்கும் இடம் நம்முடனே இருக்கட்டும், நம்முடைய குரல் எப்போதும் ஓங்கி ஒலிக்கட்டும் என்பதை பெண்களுக்கு கூற கடமைப்பட்டுள்ளேன்’’ என்றார்.

Tags : Women's Day ,Chennai Press Club ,Chennai ,International Women's Day ,Rohini ,Union… ,
× RELATED நடிகர் விஜயை பின் தொடர்ந்ததால்...