×

குலுங்கியது திருச்சி; 12வது திமுக மாநில மாநாடு 10 லட்சம் பேர் குவிந்தனர்: 110 அடி உயர கம்பத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடி ஏற்றி முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்

 

திருச்சி: திருச்சி சிறுகனூரில் திமுகவின் 12வது மாநில மாநாடு இன்று பிற்பகல் தேவாவின் இசை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. இதில் பங்கேற்க மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 10 லட்சம் தொண்டர்கள் குவிந்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 அடி உயர கம்பத்தில் கொடியேற்றி, முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். மாநாடு என்றாலே திமுக தான் என்பதை நிரூபிக்கும் வகையில் கடந்த காலங்களில் திமுக மாநாடுகள் நடந்துள்ளன. திமுக மாநில மாநாடுகளின் வரலாறும், அவற்றின் அரசியல் தாக்கமும் எப்போதும் கவனத்தை பெற்று வந்துள்ளன. இந்த மாநில மாநாடுகள், கட்சியின் அரசியல் திசையை நிர்ணயிக்கும் முக்கிய மேடையாகவும், தொண்டர்களை ஒருங்கிணைக்கும் பெரிய சக்தியாகவும் இருந்து வந்துள்ளன. அந்த வகையில் திருச்சி சிறுகனூரில் “ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’’ என்ற தலைப்பில் திமுகவின் 12வது மாநில மாநாடு மார்ச் 9ம் தேதி(இன்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி கடந்த 1 மாதமாக திடலை சீர்படுத்துதல், பிரமாண்ட பந்தல் அமைத்தல், மின் விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வந்தது. 110 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது.

240 அடி நீளத்தில் பிரமாண்ட மேடை, 200 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு அரங்கம், 300 ஏக்கர் பரப்பளவில் பார்க்கிங் வசதி அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு அரங்கில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட நாற்காலிகள் ேபாடப்பட்டுள்ளன. இதுதவிர இருபக்கங்களிலும் தலா 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நிற்கக்கூடிய வகையில் இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 9 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. மாநாட்டு திடல் நேற்றிரவு மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது. மாநாட்டுக்காக சத்திரம் பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம், தில்லை நகர், உறையூர், ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர் உள்பட மாநகரின் அனைத்து இடங்களிலும் திமுக கொடிகள் கட்டப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதுமிருந்து பஸ், வேன், கார்களில் இன்று காலை முதல் தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு வர துவங்கினர். இதனால் இன்று காலை முதலே மாநாட்டு வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள், நிர்வாகிகள் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிற்பகல் 3 மணிக்கு திரைப்பட இசையமைப்பாளர் தேவா மற்றும் அப்துல் குத்தூஸ் இசை நிகழ்ச்சியுடன் மாநாடு துவங்கியது. மாலை 5.30 மணிக்கு மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள 110 அடி உயர கொடிகம்பத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கட்சி கொடியை ஏற்றுகிறார்.

பின்னர் மேடையின் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள அரை கி.மீ நீள ரேம்பில் தொண்டர்கள் மத்தியில் நடந்து வரும் முதல்வர், தொண்டர்களின் வரவேற்பை பெற்று கொண்டு மாநாட்டு மேடைக்கு செல்கிறார். திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். அமைச்சர் கே.என்.நேரு வரவேற்கிறார். திமுக பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு சிறப்புரை ஆற்றுகின்றனர். இதைததொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். அப்போது அவர், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021ம் ஆண்டு இதே இடத்தில் நடந்த திமுக மாநாட்டில் தான் பெண்களுக்கு மாதம் ரூ.1000 மகளிர் உரிமை தொகை வழங்குவோம் என்பது உள்ளிட்ட 7 வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இம்முறையும் இதே போல முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை ஸ்டாலின் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் அன்பில் மகேஷ் நன்றி உரையாற்றுகிறார். மாநாட்டையொட்டி 3 டிஐஜிக்கள், 14 எஸ்பிக்கள், 14 ஏடிஎஸ்பிக்கள், 26 டிஎஸ்பிக்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 20 பாம் ஸ்குவாடும் தயாராக உள்ளது. மாநாட்டையொட்டி திருச்சி மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

 

Tags : Trichy ,12th DMK state conference ,Chief Minister ,MK Stalin ,12th state conference ,DMK ,Deva ,Sirukanur, Trichy ,
× RELATED மடப்புரம் காவளாளி அஜித்குமார் மீது...