×

ரூ.21.72 கோடியில் முதல்வர் படைப்பகங்கள், பள்ளிக் கட்டடங்கள் : திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!!

சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 8.3.2026 அன்று சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவல்லிக்கேணி, ஜானி பாட்ஷா தெருவில் 1.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் வால்டாக்ஸ் சாலை, திருப்பள்ளி தெரு பகுதியில் 1.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 54 பயணிகள் அமரும் வசதி, 6 எண்ணிக்கையிலான குளிர்சாதன இயந்திரங்கள், குடிநீர் வசதி, கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் நவீன கழிப்பறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள “திருப்பள்ளி குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம்”, ஏழு கிணறு, வால்டாக்ஸ் சாலை சண்முகம் தெருவில் 2.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள “முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம்” ஆகியவற்றை திறந்து வைத்தார்.

மேலும் துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொண்டித் தோப்பு அம்மன் கோவில் தெருவில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 2.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சென்னை நடுநிலைப் பள்ளிக் கட்டடம், ஏழுகிணறுத் தெருவில் 1.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்து மருத்துவ சேவை வசதிகளை பார்வையிட்டார்.

பின்னர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் இராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கல்மண்டபத்தில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 1.31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 60 பயணிகள் அமரும் வசதி, குளிர்சாதன இயந்திரங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் நவீன கழிப்பறை வசதிகயுடன் கட்டப்பட்டுள்ள கல்மண்டபம் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தை திறந்து வைத்தார்.

வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் அகத்தியர் நகரில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 5.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ள “அகத்தியர் நகர் விளையாட்டுத் திடலை” திறந்து வைத்து பார்வையிட்டு, விளையாட்டு வீரர், வீராங்கனைகளுடன் கலந்துரையாடினார்.

வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிட்கோ நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்.ஆர்.இளங்கோ, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 6.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இனமானப் பேராசிரியர் அன்பழகனார் சமூக நலக்கூடத்தை திறந்து வைத்து, திருமண மண்டபம், உணவருந்தும் கூடம் உள்ளிட்ட வசதிகளை பார்வையிட்டார்.

திருவல்லிக்கேணி, ஜானி பாட்ஷா தெருவில் கட்டப்பட்டுள்ள “முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம்”

ஜானி பாட்ஷா தெரு முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகமானது தரைதளம் மற்றும் இரண்டு தளங்களுடன் புத்தக அலமாரிகள், 24 இருக்கை வசதிகளுடன் படிக்கும் பகுதி, 45 இருக்கை வசதிகளுடன் முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன கழிப்பறை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

ஏழுகிணறு, சண்முகம் தெரு “முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம்

ஏழுகிணறு, சண்முகம் தெரு முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகமானது 3,060 சதுர அடி கட்டிடப் பரப்பளவில் தரைதளம், முதல் தளம் மற்றும் மேல் தளத்துடன் வாகனங்கள் நிறுத்தும் வசதி, நூலகர் அறை, புத்தகம் வழங்கும் அறை, 86 நபர்கள் அமரும் வகையில் வாசிப்பு பகுதி, 30 எண்ணிக்கையிலான புத்தக அலமாரிகள், 4 கணினிகளுடன் டிஜிட்டல் நூலகம் அமர்வு,
குழந்தைகள் வாசிப்பு பகுதி, குடிநீர் வசதி, கண்காணிப்பு கேமராகள் மற்றும் நவீன கழிப்பறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி, அகத்தியர் நகரில் மேம்படுத்தப்பட்டுள்ள அகத்தியர் நகர் விளையாட்டு திடல்

அகத்தியர் நகர் விளையாட்டு திடலில் 4,500 சதுர அடி பரப்பளவில் இரண்டு தளங்கள் கொண்ட உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளத்தில், பேட்மிண்டன் மைதானமும் மற்றும் முதல் தளத்தில் நவீன உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்விளையாட்டு திடலில் வாலிபால் மைதானம், குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, யோகா பகுதி, சறுக்கு வளையம், செயற்கை புல்வெளி மூலம் அமைக்கப்பட்ட கிரிக்கெட் மைதானம் (Turf Cricket), நீண்ட நடைபாதை, 8 வடிவ நடைபயிற்சி, கண்காணிப்பு கேமராக்கள், இருக்கை வசதிகள் மற்றும் நவீன கழிப்பறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,Creative ,Centre ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,Tamil Nadu ,Deputy ,Creative Centre ,School Buildings ,Johnny Padsha Street, Thiruvallikeni ,Chepauk-Thiruvallikeni Assembly Constituency ,Chennai Metropolitan Development Corporation ,
× RELATED தொழில்நுட்பம், உற்பத்தி...