×

ஓரம் போ… ஓரம் போ… எம்.எஸ்.எம். வண்டி வருது..!

திருப்பூர் வடக்கு தொகுதியில் அ.தி.மு.கவின் சிட்டிங் எம்.எல்.ஏவாக இருப்பவர் கே.என்.விஜயகுமார். இவர், கடந்த 2 முறை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், 3வது முறையாக மீண்டும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார். ஆனால், எதிர்பாராதவிதமாக அ.தி.மு.க. கூட்டணியில் அ.ம.மு.க. கூட்டணி இணைந்ததால் பல்வேறு பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இதனால் யாருக்கு எந்த தொகுதியில் சீட் கிடைக்கும்? என்பதை கணிக்க முடியாத நிலை உள்ளது.

குறிப்பாக, திருப்பூரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே இத்தேர்தலில் சீட் பெறுவது தொடர்பாக கடும் போட்டி நிலவி வருகிறது. பல்லடம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருக்கும் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கும், அந்த தொகுதியை சேர்ந்த சில நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் இருந்து வருவதால், அவருக்கு இம்முறை அங்கு சீட் வழங்க வாய்ப்பில்லையாம். அவ்வாறு பல்லடம் தொகுதியில் சீட் வழங்கினாலும் அவரது எதிர்ப்பு கோஷ்டியினர், அவரை தோற்கடித்து விடுவார்கள் என்ற நிலை உள்ளது.

இதனால், உஷாரான எம்.எஸ்.எம்.ஆனந்தன் வேறு தொகுதிக்கு தாவுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். அதன்படி, திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக வடக்கு தொகுதி வாக்காளர்களை கவரும் வகையில் பரிசுப்பொருட்களை லாரிகளில் கொண்டு வந்து வாக்காளர்களுக்கு வாரி வழங்கி வருகிறார். மேலும், வடக்கு தொகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

கடந்த 5 ஆண்டுகளாக வடக்கு தொகுதி பக்கமே எட்டிப்பார்க்காமல் இருந்த இவர், தற்போது ரொம்பவே வேகம் காட்டுகிறார். இது, உள்ளூர் அ.தி.மு.க. தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரும், இத்தொகுதி எம்எல்ஏ.வுமான கே.என்.விஜயகுமாரும், தொகுதிக்குள் போட்டி போட்டு கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். நலத்திட்ட உதவிகளும் வழங்கி வருகிறார்கள். சிட்டிங் எம்.எல்.ஏ.வை ஓரங்கட்டிவிட்டு, எம்.எஸ்.எம்.ஆனந்தன் இத்தொகுதியை பிடிக்க பல முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

Tags : MSM ,KN Vijayakumar ,AIADMK ,Tiruppur North constituency ,AIADMK… ,
× RELATED ‘அவங்ககிட்டே ஒட்டு, ஒறவு...