- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்
- ஆளுநர் ஆர். என்
- ரவி
- கவர்னர்
- மேற்கு
- வங்கம்
- சென்னை
- மேற்கு வங்கம்
- எஸ்.வி. தர்மாதிகாரி
- தலைமை நீதிபதி
- சென்னை உயர் நீதிமன்றம்
- சென்னை உயர்நீதிமன்றம்…
சென்னை: மேற்கு வங்க மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற எஸ்.வி.தர்மாதிகாரியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் 55வது தலைமை நீதிபதியாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நேற்று பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் புதிய தலைமை நீதிபதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ரகுபதி, துணை சபாநாயகர் பிச்சாண்டி, தலைமை செயலாளர் முருகானந்தம், டிஜிபி வெங்கடராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆளுநர் மாளிகை தலைமை நீதிபதி எஸ்.வி.தர்மாதிகாரியை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கு வங்காள மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்துள்ளார். கடந்த 2021 செப்டம்பர் 18ம் தேதி தமிழகத்தின் 26வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார். ஆளுநராக பதவியேற்றது முதல் தமிழக அரசுக்கு தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை கொடுத்துவந்தார். குறிப்பாக தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டார். இது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டின் அடிப்படையில் சில மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார். நீதிமன்றமும் சில மசோதாக்களை தாமாக முன்வந்து நிறைவேற்றி உத்தரவிட்டது. அது மட்டுமல்லாமல் தமிழக சட்டப் பேரவையில் ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்தில் நடைபெறும் ஆளுநர் உரையை படிக்காமல் புறக்கணித்துவந்தார். அவர் பங்கேற்கும் அரசு விழாக்களில் தமிழக அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்தார். பல்கலைக்கழகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும், அரசு விழாக்களிலும் சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்தார். இந்த சர்ச்சைகளால் பட்டமளிப்பு நிகழ்ச்சிகளில் ஆர்.என்.ரவி கையால் பல மாணவ, மாணவிகள் பட்டங்களை வாங்காமல் மேடையிலேயே புறக்கணித்தனர்.
பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் பேராசிரியர்கள், சிண்டிகேட் உறுப்பினர்கள் நியமனங்களில் தலையிட்டார். இதனால், முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் ஆளுநரை முதல்வர் விமர்சித்து வந்தார். அவர் தமிழகத்தில் இருக்கும்வரை திமுகவுக்கு நல்லது என்று முதல்வர் வெளிப்படையாகவே பேசிவந்தார். தேர்தல் வரை ஆர்.என்.ரவி தமிழகத்தில் கவர்னராக தொடர வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் ஆர்.என்.ரவியை மேற்கு வங்க ஆளுநராக நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார். சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு மாதம் இருக்கும் நிலையில் ஆர்.என்.ரவி மாற்றப்பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தின் புதிய ஆளுநராக (பொறுப்பு) கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து மாநிலம் மாற்றப்பட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் மேற்கு வங்கத்திற்கு செல்லவுள்ளார். இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்து, திருவள்ளுவர் சிலையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். ஆர்.என்.ரவியும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.
