×

பயோமெட்ரிக் இயந்திரத்தில் கைரேகை பதிவாகாததால் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்

சத்தியமங்கலம் : பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உத்தண்டியூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் கிராமப்புற தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இத்திட்டத்தில் தொழிலாளர்களின் வருகை பதிவேடு பயோமெட்ரிக் மூலம் பதிவு செய்யப்படுகிறது. இதற்கென தினமும் கண்விழி மற்றும் கைவிரல் ரேகை பயன்படுத்தி பயோமெட்ரிக் இயந்திரத்தின் மூலம் வருகை பதிவு செய்யப்படுகிறது.

இதில், வயதான ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு கடந்த ஒரு வார காலமாக பயோமெட்ரிக் இயந்திரத்தில் ரேகை பதிவாகவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவர்களுக்கு ஒரு வாரமாக வேலை அளிக்கப்படாததால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை சத்தியமங்கலம் -மேட்டுப்பாளையம் சாலையில் எரங்காட்டூர் பஸ் ஸ்டாப் அருகே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த பவானிசாகர் இன்ஸ்பெக்டர் அன்னம், பவானிசாகர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பயோமெட்ரிக் வருகை பதிவேடு ரேகை பதிவு செய்வது குறித்து உடனடியாக உயரதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Sathyamangalam ,Utthandiyur panchayat ,Bhavanisagar panchayat ,
× RELATED நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில்...