×

போச்சம்பள்ளி பகுதியில் செங்கற்கள் தயாரிப்பில் தொழிலாளர்கள் தீவிரம்

போச்சம்பள்ளி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக போச்சம்பள்ளி தாலுகாவில் செங்கல் தயாரிப்பு தொழில் பிரதானமாக உள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் செங்கற்கள் திருவண்ணாமலை, சென்னை, வேலூர் மற்றும் உள்ளூர் தேவைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த சில வருடங்களாக போச்சம்பள்ளி, மத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் வீடு, கடைகள் மற்றும் வணிக வளாகம் கட்டுமானம் அதிகரித்து வருகிறது. இதற்காக செங்கல் அதிகளவில் தேவைப்படுகிறது. தினமும் லட்சக்கணக்கான செங்கல் தயாரிக்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு 10 லோடு லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக, கோடைக்கு முன்பே வெயில் வாட்ட தொடங்கியுள்ளது. இதனால் செங்கற்கள் தயாரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து செங்கல் சூளை உரிமையாளர்கள் கூறுகையில், `சூளைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு 6, 7 மாதங்கள் மட்டும் தான் வேலையும், வருமானமும் கிடைக்கிறது.

உரிமையாளர்களுக்கும் இதே நிலை தான். மழை இல்லாத காலங்களில் இரவு, பகல் பாராமல் செங்கல் தயாரிப்பில் ஈடுபடுகிறோம். கடந்த சில வாரங்களாக, செங்கல் தயாரிப்பு அதிகரித்துள்ளதால், தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது,’ என்றனர்.

செங்கலுக்கு தனி மவுசு

சமீப காலமாக ஹாலோ பிரிக்ஸ் கற்கள் பயன்பாட்டுக்கு வந்து, வர்த்தக ரீதியாக கடும் போட்டியை ஏற்படுத்தி வந்தாலும், செங்கற்களின் பயன்பாட்டிற்கு இன்று வரை மவுசு குறையாமல் இருந்து வருகிறது. ஒரு செங்கல் சூளை அமைக்க ஏக்கர் பரப்பளவுக்கு இடம் தேவைப்படுகிறது.

மாதந்தோறும் மாவட்டத்தில் 1 கோடி அளவிற்கு செங்கல் தயாரிக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நல்ல தரமான மண் கொண்டு தயாரிக்கப்படுவதால், செங்கலின் தரமும் உயர்ந்து காணப்படுகிறது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் செங்கற்களுக்கு தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது.

Tags : Pochampally ,Krishnagiri district ,Pochampally taluka ,Tiruvannamalai, Chennai ,Vellore… ,
× RELATED நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில்...